யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வியாழக்கிழமை
2018-08-30




முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.
திருப்பாடல் 145: 2-3. 4-5. 6-7

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. -பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். -பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். 7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம் கூறியது: ``விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

சிறந்த மேலாளர்

நீங்க மிகச் சிறந்த மேலாளரராகத் திகழ ஆசையா? இரண்டு குணம் இருக்கா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஓன்று, உங்கள் மேலதிகாரிக்கு நம்பிக்கைக்குரியவராக இருங்கள். இரண்டாவது, உங்களைப்பொருத்த மட்டில் நீங்கள் அறிவுள்ளவராக நடந்துகொள்ளுங்கள். நம்பிக்கைக்குரியவன் கொடுத்த வேலையை, எப்படிப்பட்டதாயினும் மேலதிகாரி எதிர்பார்க்கும் விதத்தில் எப்பாடுபட்டாயுனும் செய்துகாட்டுவான். அறிவுடையவன் நேரத்தையும் பொருளையும் வீணாக்காமல், எந்தவித குறைசொல்லுக்கும் இடமின்றி பெருமையுடன் செய்துமுடிப்பான். இத்தகையோர் ஆள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இடம் சூழல் வாய்த்தாலும் சரி, வாய்க்காவிட்டாலும் சரி, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை அர்ப்பணத்துடன் செய்வதால், இவர்கள் வாழ்வில் எப்பொழுதும் உயர்வே வந்தடையும். "அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார்". (மத்24'47) வெளி;வேடமும் சந்தர்ப்பவாதமும் சற்றும் இவர்களிடம் இல்லாததால், இவர்கள் வாழ்வில் அழுகைக்கும் அங்கலாய்ப்புக்கும் இடமே இல்லை. இயேசு சொன்னதை செயல்படுத்திப் பாருங்கள்.உயர்வு தானாக வந்து சேரும்.

மன்றாட்டு:

இறைவா, உண்மைக்குச் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.