யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-08-10

புனித லாரன்ஸ்
முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். ``ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
திருப்பாடல்112: 1-2. 5-6. 7-8. 9

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி 5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி 7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. பல்லவி 9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''கிரேக்கர் சிலர்... பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டுக்கொண்டார்கள்'' (யோவான் 12:20-21)

இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் யூதர்கள் மட்டுமல்ல, பிற இனத்தாரும் அவரை ஏற்றனர் என்னும் உண்மையை இங்கே யோவான் நற்செய்தி தெரிவிக்கிறது. இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார். அங்கே வழிபடுவதற்கென்று யூதர்களும் ''சில கிரேக்கர்களும்'' வருகின்றனர். இங்கே கிரேக்கர்கள் எனக் குறிக்கப்படுவோர் ''பிற இனத்தார்'' ஆவர். அவர்கள் இயேசுவைத் தேடி வருகிறார்கள். நேரடியாக அவர்கள் இயேசுவிடம் போகவில்லை. மாறாக, இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவை அவர்கள் அணுகுகிறார்கள். ''ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்பது அவர்களது வேண்டுகோள். -- இங்கே பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. தொடக்க காலத் திருச்சபை இயேசுவின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் உலக மக்கள் அனைவருக்குமே உரியது என்னும் உண்மையை உணர்ந்தது. ஆகவே, இயேசுவைத் தேடி எல்லா மக்களுமே வருகிறார்கள். அவ்வாறு வருவோரை இயேசுவிடம் கொண்டுசெல்லும் பணி இயேசுவின் சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிலிப்பு இங்கே இயேசுவின் சீடர்களுக்கு அடையாளம். இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் பிற மக்களையும் இயேசுவிடம் இட்டுச் செல்ல வேண்டும். ஏனென்றால் ''இயேசுவைக் காண விரும்பி'' வருகின்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் எழுகின்ற தாகத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அவர்களை வாழ்வின் ஊற்றாகிய இயேசுவிடம் நாம் இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவே நமக்கு வாழ்வளிக்கின்றார். மண்ணில் விழுந்து மடிகின்ற கோதுமை மிகுந்த விளைச்சலைத் தருவதுபோல, சிலுவையில் இறக்கின்ற இயேசு நமக்கு நிலைவாழ்வு அளிக்கிறார். அவரை நாம் அணுகிச் சென்று வாழ்வு பெறுவதோடு பிறரையும் அவரிம் கூட்டிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தியின் தூதுவர்களாக எங்களை மாற்றியருளும்.