யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் புதன்கிழமை
2018-08-08




முதல் வாசகம்

உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ``அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.'' ஆண்டவர் கூறுவது இதுவே: ``வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர். ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்; மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக்கொண்டு நீ வெளியேறுவாய்; சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்; தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர்.ஏனெனில் ஒரு நாள் வரும்; அப்பொழுது எப்ராயிம் மலையில், `எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப் போவோம்; நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று காவலர்அழைப்பு விடுப்பர்.'' ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: ``யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; `ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ' என்று பறைசாற்றுங்கள்.''

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.
எரே 31: 10. 11-12

மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். பல்லவி 11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12யb அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள் ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். பல்லவி 13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ``ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்'' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ``நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்'' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, ``இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ``ஐயா, எனக்கு உதவியருளும்'' என்றார். அவர் மறுமொழியாக, ``பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார். உடனே அப்பெண், ``ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே'' என்றார். இயேசு மறுமொழியாக, ``அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்'' என்று அவரிடம் கூறினார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''கனானியப் பெண் இயேசுவின் முன் வந்து பணிந்து, 'ஐயா எனக்கு உதவியருளும்' என்றார். இயேசு மறுமொழியாக, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார்'' (மத்தேயு 15:25-26)

இயேசு மக்களுக்கு நன்மை செய்துகொண்டே போனார். அவர் புரிந்த புதுமைகளும் மக்களுக்கு நலம் கொணரவே நிகழ்ந்தன. இருப்பினும், மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் பணி இஸ்ரயேல் மக்கள் நடுவே மட்டும் நிகழ்வதாகக் காட்டப்படுகிறது. இது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய இழுபறி நிலையைப் பிரதிபலிக்கிறது என விவிலிய அறிஞர் கருதுகின்றனர். அதாவது, இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவரை ஆண்டவராக, மெசியாவாக ஏற்றவர்கள் அவர் இஸ்ரயேல் மக்களுக்குப் பணிசெய்யவே வந்தார் எனக் கருதினார்கள். இயேசுவின் பணி பெரும்பாலும் இஸ்ரயேல் நாட்டுப் பகுதியிலேயே நிகழ்ந்ததாக மத்தேயு குறிப்பிட்டாலும், சில இடங்களில் பிற இனத்தாருக்கு இயேசு நலம் கொணர்வதையும் அதே மத்தேயு சுட்டிக்காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, பிற இனத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவரின் பையனை இயேசு குணமாக்கியதைக் குறிப்பிடலாம் (காண்க: மத் 8:5-13). அதுபோலவே, பிற இன மனிதர் இருவரைத் தீய சக்தியின் பிடியிலிருந்து இயேசு விடுவித்ததையும் கருதலாம் (காண்க: மத் 8:28-34). இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய சீடர் உலக மக்கள் அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்பட்டனர் (மத் 28:16-20).

இயேசுவை அணுகிவந்த கனானியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்கின்ற உரையாடலில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அப்பெண் இயேசுவிடம் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இயேசுவை மூன்று முறை ''ஆண்டவரே'' என்றும் (பொது விவிலியத்தில் ''ஐயா'' என்னும் சொல் ஆளப்படுகிறது), ''தாவீதின் மகனே'' என்றும் அழைக்கிறார். இந்த இரு சொற்களும் இயேசுவை மெசியா என அப்பெண் கருதியதைக் காட்டுகிறது. ஆனால் இயேசுவோ மவுனம் காக்கிறார். ஒரு சொல் கூட அப்பெண்ணுக்குப் பதில்மொழியாக அவர் கூறவில்லை. சீடர்கள் வேறே எரிச்சல் படுகிறார்கள் (மத் 15:23). இயேசுவும் அப்பெண்ணை நாய்க்கு ஒப்பிட்டு இழிவுபடுத்துவது போல் தெரிகிறது (மத் 15:26). ஆனால் அப்பெண் மன உறுதியை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் போதும் தன் மகள் குணம்பெறுவாள் என அப்பெண் விடாப்பிடியாக நிற்கிறார். கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு அவரை அணுகுவோர் ஏமாற்றமடையார் என்பதற்கு இப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை சிறந்த எடுத்துக்காட்டு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை எந்நாளும் நாடிச் சென்று அவர் காட்டும் வழியில் நடந்திட எங்களுக்கு அருள்தாரும்.