யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
பொதுக்காலம் 18வது வாரம் திங்கட்கிழமை
2018-08-06

ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா




முதல் வாசகம்

அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10,13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
திருப்பாடல் 97: 1-2. 5-6. 9

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி

இரண்டாம் வாசகம்

விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம். எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

- ஆண்டவரின் அருள்வாக்கு

- இறைவனுக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்

நற்செய்தி வாசகம்

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்9;2-9

ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத்தேயு 17:7)

இயேசு ''தோற்றம் மாறிய'' நிகழ்ச்சியை விவரிக்கும்போது மத்தேயு பயன்படுத்துகின்ற சொற்கள் இயேசு உண்மையிலேயே இறைப் பண்பு கொண்டவர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது; அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. கடவுளின் மாட்சி தோன்றும்போது அதன் ஒளி மனிதரின் கண்களைப் பறிக்கும் சக்தி வாய்ந்ததாகும் என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில் உண்டு. இங்கே இயேசுவின் முகத்திலிருந்து வெளியான ஒளி ஒருபக்கம் இருக்க, ஒளிமயமான மேகம் ஒன்றும் தோன்றி அவர்கள்மேல் நிழலிடுகிறது. இதுவும் கடவுளின் பிரசன்னத்தைக் குறிக்கின்ற அடையாளமே. எனவே, உயர்ந்த மலை, ஒளிவீசும் முகம், ஒளிமயமான மேகம் போன்றவை இயேசுவின் இறைத் தன்மையைச் சீடர்களுக்கு எடுத்துக் காட்டின. மேலும் ''என் அன்பார்ந்த மகன் இவரே'' என்னும் சொற்கள் மேகத்திலிருந்து புறப்பட்டு வந்து, இயேசு வானகத் தந்தையின் மகன் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது சீடர்கள் பெற்ற சக்திவாய்ந்த இறை அனுபவம். ஆனால் சீடர்களை அச்சம் தொற்றிக்கொள்கிறது. அவர்கள் முகங்குப்புற விழுகிறார்கள். சீடர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வருகிறார் இயேசு.

சீடர்களின் அச்சத்தைப் போக்கிய இயேசு அவர்களைத் ''தொட்டு'' பேசுகிறார். அவர்கள் தரையில் விழுந்த நிலையில் அப்படியே கிடப்பது சரியல்ல, மாறாக, அவர்கள் ''எழ வேண்டும்''. அச்சம் அவர்களைவிட்டு நீங்கிப் போகும்; அவர்கள் பெற்ற இறை அனுபவம் அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள வழியாகும். இயேசு தோற்றம் மாறியதைக் கண்ட சீடர்கள் பேறுபெற்றவர்கள். இயேசுவின் சீடராகிய நமக்கும் இந்த இறை அனுபவத்தில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலுவையில் உயிர்துறந்து, அதன் பின்னர் புத்துயிர் பெற்று எழுந்த இயேசு நம்மோடு தங்கியிருக்கிறார். அவரை நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றோம். அவருடைய குரல் நம் உள்ளத்தின் ஆழத்தில் ஒலிக்கிறது. ஆனால் இந்த இறை அனுபவத்தை நாம் உள்ளார உணர வேண்டும் என்றால் நம் அகக் கண்கள் திறக்க வேண்டும். இயேசுவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். அப்போது நம் அச்சம் நீங்கும்; நாமும் எழுந்து சென்று, ஊக்கத்தோடு இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிசாய்த்து, அவரது வழியில் நடந்திட அருள்தாரும்.