யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-07-31

புனித லொயேலா இஞ்ஞாசியார்




முதல் வாசகம்

நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22

ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர். நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது! ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
திருப்பாடல் 79: 8. 9. 11,13

எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. 13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' (மத்தேயு 13:28)

நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. -- கிறிஸ்தவ சமயம் இக்கேள்விக்குத் தருகின்ற பதில் என்ன? தீமை இவ்வுலகில் தோன்றுவதற்குக் காரணம் தொடக்க காலத்தில் மனித வரலாற்றில் நுழைந்துவிட்ட பாவம்தான். முதல் மனிதர் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்கள் வழியாகப் பாவம் உலகில் நுழைந்து வரலாற்றில் எல்லா மனிதர்களையும் பாதித்துவிட்டது. உலகில் நிலவும் பாவம் மனித உள்ளத்தில் பாவ நாட்டமாகத் தோன்றுகிறது; மனிதருக்கும்; கடவுளுக்குமிடையே உள்ள உறவினை முறிக்க பாவம் முயல்கிறது. என்றாலும், அறுவடைக் காலத்தில் நல்ல பயிரும் களைகளும் அடையாளம் காணப்பட்டு நல்ல பயிர் களஞ்சியத்தில் சேர்க்கப்பட, களை தீயிலிட்டு எரிக்கப்படுவது போல, மனித வரலாற்றின் இறுதியில் பாவம் என்னும் தீமையும் அதன் விளைவுகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, நன்மை வெற்றி பெறும். நன்மையே உருவான கடவுள் நம்மைத் தம்மோடு நிலையான அன்புறவில் இணைத்துக்கொள்வார். கிறிஸ்துவின் சிலுவைச் சாவினால் நாம் புத்துயிர் பெற்று, நல்ல பயிரைப் போல நற்பயன் நல்குவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உமது வார்த்தையாகிய நல்ல விதையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் வளர்ந்து, முதிர்ந்து உலகின் வாழ்வுக்காக நற்பயன் நல்கிட அருள்தாரும்.