யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் வியாழக்கிழமை
2018-07-26

புனித சுவக்கிம் அன்னா (அன்னைமரியா பெற்றோர்)0




முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது
எரேமியா2.1 3 7 8 12 13

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர். செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள். குருக்கள், “ஆண்டவர் எங்கே?” என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். 13 ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்; பொங்கிவழிந்தோடும் நீரூயஅp;ற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது!
திருப்பாடல் 36;5-10

ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.பல்லவி

6 ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை; மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;பல்லவி

7 கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.பல்லவி

8 உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.பல்லவி

9 ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.பல்லவி

10 உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு 13; 10-17

சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். 11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது; “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. 12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். 13 அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். 14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது; “நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. 15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.” 16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. 17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன" (மத்தேயு 13:16)

இயேசுவோடு நெருங்கிப் பழகியவர்கள் பேதுரு முதலிய பன்னிரு திருத்தூதர்கள், மற்றும் மரியா, மார்த்தா போன்ற சீடர்கள். இவர்களுடைய கண்கள் பேறுபெற்றவை என இயேசு கூறியது எதற்காக? இங்கே இயேசு தம் சீடரின் புறக்கண்கள் பற்றி மட்டும் பேசவில்லை, அவர்களுடைய அகக்கண்கள் பற்றிப் பேசுகிறார். இயேசுவின் போதனையைக் கேட்ட மனிதர் நூற்றுக் கணக்கில் இருந்தனர்; அவர் ஆற்றிய அரும் செயல்களைக் கண்டவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தனர். ஆனால் இயேசுவைக் கண்டு, அவர் பேசியதைக் கேட்ட எல்லா மனிதரும் அவர் யார் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய சீடர்கள்தான் அவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அவர்கள்கூட பல தடவைகளில் இயேசுவின் சொற்களை முற்றிலுமாக நம்பிடவில்லை. இயேசு அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர்களைக் கடிந்துகொண்டதும் உண்டு.

ஆனால், சீடர்கள் இயேசு யார் என்பதைப் படிப்படியாகக் கண்டுணர்ந்தனர். இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்றும், கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, இறைவாழ்வில் நாம் பங்குபெய இயேசு சிலுவையில் இறந்து நமக்காகப் புத்துயிர் பெற்று எழுந்தார் என்றும் சீடர்கள் தம் இதய ஆழத்தில் உணர்ந்தனர். இத்தகைய அறிவை அவர்கள் பெறுவதற்குத் தூய ஆவியின் துணை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆவி உயிர்த்தெழுந்த இயேசுவின் உடனிருப்பே. எனவே, சீடர்களின் கண்கள் பேறுபெற்றவை, ஏனெனில் அவை இயேசு பற்றிய உண்மையைக் கண்டுகொண்டன. இன்று வாழ்கின்ற சீடராகிய நாமும் இயேசு யார் என்பதைக் கண்டுகொள்ள அழைக்கப்படுகிறோம். நம்பிக்கையோடு நாம் அவரை அணுகிச் சென்றால் அவரை நாம் அடையாளம் கண்டுகொள்வோம். அப்போது நாமும் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் ஆவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று, அவரை எங்கள் மீட்பராகக் கண்டுகொள்ளவும் அவர் அறிவித்த இறையாட்சியைத் தழுவிக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும்.