யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-07-24




முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன். உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
திருப்பாடல் 85: 1-3. 4-5. 6-7

ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர். 2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். 3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர். கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். பல்லவி

4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும். 5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? பல்லவி

6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ? 7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.''

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை'' (லூக்கா 8:19)

நற்செய்தி நூல்களில் இயேசுவின் ''சகோதரர்கள்'' பற்றிய குறிப்பு வருகிறது. இவர்கள் உண்மையிலேயே மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளா அல்லது மரியா, யோசேப்பு ஆகியோரின் உடன்பிறந்தோருக்குப் பிறந்த பிள்ளைகளா, அல்லது உருவக முறையில் மட்டுமே இயேசுவுக்கு ''சகோதரர்களா''? இக்கேள்விக்கு விவிலிய ஆதார அடிப்படையில் என்ன பதில் அளிப்பது? நம்மில் பலரும் நினைப்பது கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி மரியா இயேசுவின் பிறப்புக்கு முன்னும் பின்னும் கன்னியாக இருந்தார்; புராட்டஸ்டாண்டு சபையினர் மரியாவின் கன்னிமையை ஏற்காமல் மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளே இங்கு ''இயேசுவின் சகோதரர்கள்'' எனக் குறிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு நாம் நினைத்தால் அது சரியல்ல. ஏனென்றால் கத்தோலிக்கத் திருச்சபையில் வேறு விளக்கங்கள் தரப்பட்டதும் உண்டு; புராட்டஸ்டாண்டு சபையிலும் வேறு விளக்கங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, புராட்டஸ்டாண்டு சீர்திருத்தத்தைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் (1483-1546), ஜான் கால்வின் (1509-1564) ஆகியோர் மரியா எப்போதும் கன்னியாக இருந்தார் என்னும் உண்மையை மறுக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் பல புராட்டஸ்டாண்டு சபைகளில் மரியாவுக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருந்தனர் என்னும் கருத்து எழலாயிற்று. இருப்பினும் இன்றுகூட ஆங்கிலிக்கன் சபையினரில் ''உயர் பிரிவினர்'' மரியாவின் கன்னிமையை ஏற்பர்.

கத்தோலிக்க சபையில் நிலவுகின்ற முக்கிய விளக்கங்கள் இரண்டு. எப்பிபானியுஸ் (320-403) என்னும் பண்டைய அறிஞர் கருத்துப்படி, இயேசுவின் ''சகோதரர்கள்'' எனக் குறிக்கப்படுவோர் உண்மையில் இயேசுவின் ''ஒன்றுவிட்ட சகோதரர்கள்'' ஆவர். அதாவது, யோசேப்பு மரியாவை மணப்பதற்கு முன் வேறொரு திருமணம் செய்திருந்தார் எனவும், அந்த முதல் மனைவியின் இறப்புக்குமுன் அவர்கள் திருமணத்தின் வழி பிறந்த பிள்ளைகளே இயேசுவின் ''சகோதரர்கள்'' என நற்செய்தி நூல்களில் குறிக்கப்படுகிறார்கள் எனவும் எப்பிபானியுஸ் கருத்துத் தெரிவித்தார். இக்கருத்து கத்தோலிக்க சபையின் கீழைப் பகுதிகளில் பரவலாயிற்று. இக்கருத்து தவிர, தூய எரோணிமுசு என்னும் திருச்சபைத் தந்தை (347-420) இயேசுவின் ''சகோதரர்கள்'' உண்மையிலேயே அவருடைய உடன்பிறப்புகள் அல்ல எனவும், மரியா, யோசேப்பு ஆகியோரின் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளே ''இயேசுவின் சகோதரர்கள்'' என நற்செய்தி நூல்களில் குறிக்கப்படுகிறார்கள் எனவும் கருத்து வெளியிட்டார். இக்கருத்தையே உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கற்பித்துவந்துள்ளது. ஆக, மரியா இறைவனின் அருளால் கன்னிமை குன்றாமல் காக்கப்பட்டார் என்னும் உண்மைக்கு அடித்தளம் விவிலியத்தில் உள்ளது எனலாம். ஆனால் அதை ஒரு போதனையாக விளக்கி மக்களுக்குப் போதிப்பது திருச்சபை ஆகும். தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்படுகின்ற திருச்சபை கடவுளின் வார்த்தையை நமக்கு விளக்கி உரைப்பதில் தவறிப் போவதில்லை. இயேசுவைப் பின்செல்லும் மக்கள் ஒரு புதிய ''குடும்ப உறவில்'' பங்கேற்கின்றனர். அங்கே இரத்த உறவு முக்கியமல்ல. எனவேதான் இயேசு, ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார் (லூக் 8:21). இந்த இறைக் குடும்பத்தில் நாம் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளதால் நாம் பேறுபெற்றவர்களே.

மன்றாட்டு:

இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக்கியுள்ளீர் என்பதை உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.