யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-07-22

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்: 23: 1-6,பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை:,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய் திருமுகத்திலிருந்து வாசகம்: 2: 13-18,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 30-34)






திருப்பலி முன்னுரை

இறைவனுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் மந்தையாகிய மக்கள் முறையான வழிநடத்துதல் இன்றி சிதறிப்போகும்போது, ஆண்டவர் நமக்காக புதிய ஆயர்களை வழிகாட்டிகளாக அனுப்புகிறார் என்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இறைவனின் பராமரிப்பை வழங்கும் திருச்சபையின் திருப்பணியாளர்களைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனால் நம்மிடம் அனுப்பப்பட்ட மேய்ப்பர்களாகிய அவர்களை ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்: 23: 1-6

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்: அதனைத் துரத்தியடித்தீர்கள்: அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா: திகிலுறா: காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன: அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர் " தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்: இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ " என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா. 23: 1-6
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை:

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

இரண்டாம் வாசகம்

இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய் திருமுகத்திலிருந்து வாசகம்: 2: 13-18

ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அங்கிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 30-34

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் " என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த பணியாளர்களாக விளங்கவும், திருச்சபையின் மக்கள் அனைவரையும் உமது பணி செய்பவர்களாக உருமாற்றவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆயர்களை அனுப்புபவராம் இறைவா,

இந்த உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தலைமைப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் உமது அன்பினால் நிறைத்து, உமக்கு உகந்தவர்களாய் இறையரசைக் கட்டியெழுப்பும் தெளிந்த மனதை அவர்களில் உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா!

எங்கள் பங்கிலும், எம் குடும்பங்களிலும் உள்ள. எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வும், அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அற்புதங்கள் செய்பவராம் இறைவா,

பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், கிறிஸ்தவர்களின் செபங்களால் அற்புதங்களைப் பெற்று உமது இறையரசில் ஒன்றிணைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. உயிரைச் சாவினின்று காக்கின்ற தந்தையே இறைவா!

யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. ஒன்றிணைப்பவராம் இறைவா,

பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள், நாடுகள் மற்றும் இனங்களின் மக்கள் அனைவரும், ஏற்றுக்கொள்தல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்தவர்களாய், பகைமையை விடுத்து ஒன்றிப்பில் புது வாழ்வு காண அகத்தூண்டுதல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

உழைப்பும், ஓய்வும் !

“உழைப்புதான் மானிடரின் இலக்கணம் ” என்று கூறினார் கார்ல் மார்க்ஸ். “உழைக்காதவர் உண்ணலாகாது” என்றார் பவுலடியார். உழைப்புக்கு இலக்கணமாக யாவே இறைவனையே விவிலியம் எடுத்துக்காட்டாகத் தருகிறது. தொடக்க நூலின் முதல் அதிகாரங்களில் இறைவன் ஆறு நாள்களில் இந்த உலகையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். ஓய்வின்றி உழைப்பதும் தவறு. உழைப்பின்றி ஓய்வெடுப்பதும் தவறு. நன்கு உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அந்தத் தந்தையின் திருவுளத்திற்கேற்பவே, திருமகன் இயேசுவும் செயல்பட்டார். அதிகாலை செபத்திலிருந்து, பகல் நேர நற்செய்தி அறிவிப்பு, மாலையில் நோயாளர்களைக் குணப்படுத்துதல், இரவில் வீடுகளில் உறவை வளர்த்தல் எனப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார். தம் சீடர்களுக்கும் அந்தப் பயிற்சியை வழங்கினார். எனவேதான், சீடர்கள் திருத்தூதுப் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ” என்று மொழிந்தார். சற்று ஓய்வெடுங்கள் என்னும் சொல்லாடல் நம் கவனத்தை ஈர்க்கிறது. தேவையான ஓய்வு. இறைவன் நம்மீது அக்கறை உள்ளவர், நம்மைப் புரிந்துகொள்பவர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் அடையாளமாகத் திகழ்கிறதல்லவா?

மன்றாட்டு:

ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நாங்கள் உழைக்கவும், போதுமான உடல், உள்ள, ஆன்ம ஓய்வுபெறவும் வேண்டும் எனத் திருவுளம் கொண்டீரே. உமக்கு நன்றி. நீர் மட்டுமே தர முடிகின்ற அமைதியை, இளைப்பாறுதலை, ஓய்வை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.