யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் வியாழக்கிழமை
2018-06-14




முதல் வாசகம்

எலியா செபித்தார். வானம் பொழிந்தது.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46

அந்நாள்களில் எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார். பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார். ஏழாம் முறை அவன் சென்று பார்த்து, “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார். இதற்கிடையில் வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, இஸ்ரியேல் வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம்மைப் புகழ்ந்து பாடுவது கடவுளே, ஏற்புடையது!
திருப்பாடல் 65: 9-10. 11-12

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4யஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். `கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உங்கள் நெறி உயர்ந்திருக்கட்டும் !

“மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட, உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்” என்னும் ஆண்டவரின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் வாழ்வு முறை சாதாரண மக்களைவிட, மேலானதாக, கடினமானதாக இருந்தது. லூக் 18ல் வருகிற உவமையில் பரிசேயன் வாரத்தில் இரு நாள்கள் நோன்பிருப்பதாகவும், வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பதாகவும் பார்க்கிறோம். எனவே, இறைப்பற்று, சட்டங்களைப் பின்பற்றுவதில் அவர்கள் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருந்தனர். ஆனால், ஆண்டவர் இயேசுவே சுட்டிக்காட்டியதுபோல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போல, வெளிப்பார்வைக்கு நேர்மையாளர்களாகவும், உள்ளே முரண்பாடுகள் நிறைந்தவர்களாகவும் விளங்கினர். இறையன்பில் சிறந்து விளங்கினர், ஆனால், பிறரன்பு இல்லாமல் வாழ்ந்தவனர். எனவேதான், அவர்களின் ‘நெறியைவிட, உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்’ என்று இயேசு கூறும்பொழுது, அவர்களின் நல்லவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து வாழுங்கள் என்று அழைக்கிறார். ஆகவே, நாம் செப வாழ்விலும், பணி வாழ்விலும் அர்ப்பணத்தோடு வாழும்போது, நமது வாழ்வு இயேசுவின் எதிர்பார்ப்புக்கேற்றவாறு அமையும்.

மன்றாட்டு:

ஆவியைத் தருபவரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் தந்த அழைப்;பை ஏற்று, எங்கள் வாழ்வு பரிசேயர், மறைநூல் அறிஞரின் வாழ்வைவிட மேலானதாக அமைய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.