யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் புதன்கிழமை
2018-06-13




முதல் வாசகம்

நீரே ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறிவார்களாக!
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 20-39

அந்நாள்களில் ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய் வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான். எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!” அப்பொழுது எலியா மக்களிடம், “ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நானூற்றைம்பது பேர் இருக்கின்றனர். இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால் நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்” என்றார். மக்கள் அனைவரும் பதில் மொழியாக, “நீர் சொல்வது சரியே” என்றனர். பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, “பாகாலே! பதில் தாரும்” என்று கத்தினர். ஆனால் எக்குரலும் கேட்க வில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர். நண்பகலாயிற்று, எலியா அவர்களைக் கேலி செய்து, “இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்!” என்றார். எனவே அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள். பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்க வில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை. அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார். ‘உன் பெயர் இஸ்ரயேல்’ என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலி பீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார். அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். “நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின் மேலும் ஊற்றுங்கள்” என்றார். அவர் “இரண்டாம் முறையும் செய்யுங்கள்” என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். எ னவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, “ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே! எனக்குப் பதில் தாரும்!” என்றார். உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும் விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது. இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!” என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
திருப்பாடல் 16: 1-2. 4. 5,8. 11

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2ய நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன். பல்லவி

4 வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்துகொள்ளேன்; அவற்றின் பெயரைக் கூட நாவினால் உச்சரியேன். பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்' என்றார்'' (மத்தேயு 5:17)

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை என இயேசு கூறியபோது யூத மரபில் தாம் வேரூயஅp;ன்றியிருப்பதை அவர் காட்டினார். திருச்சட்டம் என்பது யூத மக்களுக்கு மோசே வழியாக வழங்கப்பட்டது. இறைவாக்கு என்பது கடவுளின் திட்டத்தை மக்களுக்குக் கடவுளின் பெயரால் எடுத்துரைத்த இறைவாக்கினரின் போதனையைக் குறிக்கும். யூத மக்களின் சமய நூலில் காணப்படுகின்ற போதனைகள் முழுவதையும் ''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் சொல்வழக்கு உள்ளடக்கும். எனவே, இயேசு யூத சமயப் போதனைகளைத் தாம் அழிக்க வரவில்லை என்றும், அவற்றை ''நிறைவேற்ற'' வந்ததாகவும் கூறுகிறார். இங்கே ஒரு முரண்பாடு உள்ளதுபோலத் தோன்றலாம். அதாவது, இயேசு பல தருணங்களில் யூத சமயப் பழக்கங்களைக் கடுமையாக விமரிசத்தது உண்டு. சமயச் சடங்குகளுக்கு முன்னிடம் கொடுத்து, உள்ளத்தின் ஆழத்தில் நேர்மையின்றி நடந்தோரை இயேசு கடிந்தது உண்டு. அதே நேரத்தில் அவர் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்ற வந்ததாகவும் கூறுகிறார். இங்கே இரு முக்கியமான உண்மைகளைக் காண்கின்றோம். இயேசு பழைய ஏற்பாட்டு மரபைப் புறக்கணிக்கவில்லை என்பது முதல் உண்மை. கடவுள் யூத மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அளித்து வழிநடத்தியதை இயேசு ஏற்கிறார். யூத சமயத்தில் வழக்கிலிருந்த ஆன்மீக நெறியே இயேசுவின் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்தது. இரண்டாவது உண்மை இயேசு ஆற்றிய பணி பற்றியது. இயேசு பழைய ஏற்பாட்டு நெறியை ''நிறைவு'' செய்தது அந்த நெறியை அழிக்காமல் அதன் அடித்தளத்தில் ஒரு புதிய நெறியை அறிவித்தது ஆகும்.

இயேசு வழங்கிய புதிய நெறி அன்புக் கட்டளை ஆகும். பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற இக்கட்டளைக்கு இயேசு புதிய அர்த்தம் அளித்தார். கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டி அதை அவர்களோடு பகிர்வதே தம் பணி என இயேசு போதித்தார். கடவுளின் உள் இயல்பு அன்புதான். அக்கடவுள் நமக்குத் தந்தையாக இருந்து நம்மைப் பேணுகின்றவர். அவர் அனுப்பிய மீட்பராக வந்த இயேசு கடவுளின் அன்பு வெளிப்பாடாகத் தம்மை அடையாளம் காட்டியதோடு கடவுளின் ஆவியால் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். இவ்வாறு இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றினார். இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய பணியைத் தொடர்ந்து ஆற்ற அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.