யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் செவ்வாய் கிழமை
2018-06-05




முதல் வாசகம்

நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள்
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-15ய,17-18

அன்புக்குரியவர்களே, கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திபா 90: 2. 3-4. 10. 14,16

2 மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி, ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்து விடுகின்றோம். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு 12:13-17

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, ``ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்'' என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``சீசருடையவை'' என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு ஏரோதியரை நோக்கி, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்றார்'' (மாற்கு 12:17)

சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்னும் கேள்வியை இயேசுவிடம் கேட்டவர்கள் அவரைப் ''பேச்சில் சிக்கவைக்க'' முயன்றனர். அவர்களுடைய உள்ளத்தில் நேர்மை இல்லை. ஆனால் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொள்கிறார். அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்கிறார். ''சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுப்பதே முறை'' என்று இயேசு கூறியதைப் புரிந்துகொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ''சீசர்'' என்றால் இவ்வுலக ஆட்சியாளர்களையும் நாட்டுத் தலைவர்களையும் குறிக்கும் என்று பொருள்கொண்டு, இவ்வுலகு சார்ந்த காரியங்களுக்கும் கடவுள் சார்ந்த காரியங்களுக்கும் இடையே உறவு கிடையாது என்றும், அவற்றிற்கிடையே நிலவுகின்ற வேறுபாட்டை நாம் போக்க இயலாது என்றும் முடிவுசெய்கின்றனர். இவர்கள் உலகு சார்ந்த காரியங்களாக அரசியல், சமூக அமைப்பு, கலாச்சாரப் பாணிகள் போன்றவற்றைக் கருதுவர். இவற்றிற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனவும், சமயக் கருத்துக்களின் அடிப்படையில் உலக அமைப்பை மாற்றியமைக்க முயல்வது முறையற்றது எனவும் வாதாடுவர். ஆனால் இயேசு இப்பொருளில் பேசவில்லை. அவர் ''சீசருக்கு உரியது'' எனக் குறிப்பிட்டது அவரிடம் காட்டப்பட்ட தெனாரியம் என்னும் வெள்ளி நாணயத்தை. அதில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. யாருடைய உருவம் நாணயத்தில் உள்ளதோ அவரே அந்நாணயத்தை உருவாக்கியவர் என்னும் முறையில் அதற்கு உரிமையாளர் என இயேசு முடிவுசெய்கிறார். எனவே, சீசருக்கு வரிசெலுத்துவது சீசருக்கு உரியதைத் திருப்பிக் கொடுப்பதே ஆகும். இதைக் கூறியபின் இயேசு ''கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்'' என்றார்.

இங்கே இயேசு ஆழ்ந்ததோர் உண்மையை அறிவிக்கிறார். சீசரின் உருவம் இருந்தது நாணயத்தில்; ஆனால் கடவுளின் ''உருவமும் சாயலும்'' இருப்பது மனிதரில். ஏனென்றால் கடவுள் மனிதரைத் தம் சாயலிலும் உருவிலும் உருவாக்கினார்; அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் (காண்க: தொநூ 1:27). எனவே, மனிதர் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் கடவுள் ஒருவருக்கே பணிந்து நடக்கக் கடமைப்பட்டவர்கள். இவ்வுலக அதிகாரம் மனிதரை அடிமைப்படுத்துவதும் அடக்கியாளுவதும் தவறு. இந்த உண்மையை இயேசு அழகாக எடுத்துரைத்தார். இன்று நாம் மனிதரில் கடவுளின் சாயலலைக் காண்பது அவர்களுடைய மாண்பை நாம் மதிப்பதில் அடங்கும். மனிதர் மனிதரை அடிமைகளாவோ தங்கள் சொத்தாகவோ கருதுவது முறையன்று. நாம் அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள் என்னும் முறையில் கடவுளையே நம் கதியாக ஏற்றிட வேண்டும். அப்போது பிறருடைய மாண்பினைப் போற்றி ஏற்றிட நாம் முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் அனைவரையும் உம் சாயலில் படைத்துள்ளீர் என நாங்கள் உணர்ந்து மனித மாண்பை மதித்திட அருள்தாரும்.