யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் சனிக்கிழமை
2018-05-26




முதல் வாசகம்

நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது. என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!
திருப்பாடல்141: 1-2. 3,8

ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும். 2 தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக! மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! பல்லவி

3 ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும். 8 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் ‘சூழ்நிலை’. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர்.

இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை நிறைவாகச்செய்வதில் அதிக அக்கறை எடுக்கிறார். இறைவனின் பிரசன்னத்தை, அன்பை, இரக்கத்தை, ஆசீரை மனுக்குலம் உணரச்செய்வதுதான் இயேசுவின் கடமை. அதை நிறைவாகச்செய்வதின் சிறப்பான உதாரணம்தான் இந்த நற்செய்திப்பகுதி. தன்னுடைய பணிவாழ்வில் ஒவ்வொருநிமிடமும் இயேசு விழிப்பாக இருந்தார் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவருடைய பணிவாழ்வில் தன் சுயநலத்துக்காக எதையும் குறை வைப்பதற்கு தயாரில்லை.

வாழும் ஒவ்வொரு கணமும் நிறைவோடு வாழ வேண்டும். நம்முடைய கவலைகளும், கலக்கங்களும் நாம் மற்றவருக்கு உதவி செய்வதற்கு தடையாக இருக்கக்கூடாது. அது ஒரு பொருட்டாகவும் இருக்கக்கூடாது. இறைவனைத்துணையாகக்கொண்டு நமது வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.