யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 3வது வாரம் திங்கள்கிழமை
2018-04-16
முதல் வாசகம்

``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்''
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள். மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்கள் 119: 23-24. 26-27. 29-30

23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். -பல்லவி

26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். -பல்லவி

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:22-2

22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். 23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்ற கேட்டார்கள். 26 இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார். 28 அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்;"" என்றார்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம் , 'அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 6:27)

யோவான் நற்செய்தி 6ஆம் அதிகாரத்தில் இயேசு தம்மை ''வாழ்வுதரும் உணவு'' (யோவா 6:51) என அறிமுகம் செய்கிறார். இயேசு பல புதுமைகள் செய்தார் என்பதை அறிந்து மக்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். ஐயாயிரத்திற்கு மேலாகக் கூடிவந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு இயேசு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார். வயிறார உண்ட மக்கள் மீண்டும் உணவை எதிர்பார்த்து இயேசுவைத் தேடிச் செல்கிறார்கள். ''ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று அவரிடம் கேட்கிறார்கள். அப்போது இயேசு மக்களுக்குத் தாமே உண்மையான உணவு என்றும், அழிந்துபோகின்ற இவ்வுலக உணவைத் தேடாமல் அழியாத உணவை அவர்கள் தேட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (யோவா 6:27). இயேசுவைத் தேடிச் சென்ற மக்கள் அவரைத் தங்கள் அரசராகவும் தலைவராகவும் ஏற்படுத்திவிட்டால் அவர் தங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்னும் சுயநல எண்ணத்தோடுதான் அவரை அணுகினார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுடைய ஆன்ம பசியைப் போக்கும் சக்திவாய்ந்த ஓர் உணவை அவர்களுக்கு வாக்களிக்கின்றார். அந்த உணவு அழிந்துபோகாது; மாறாக மக்களுக்கு நிலைவாழ்வு அளிக்கும் திறன் அதற்கு உண்டு. இயேசு வாக்களித்த உணவு யாது? முதன்முதலில் இயேசுவின் போதனையும் அவர் மக்களுக்கு வழங்கிய வெளிப்பாடும் அவர் தருகின்ற உணவு எனலாம். ''செவிக்குணவில்லாத போழ்து வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்'' என்னும் வள்ளுவர் கூற்றுக்கு இணங்க, இயேசு மக்களுக்கு வழங்கிய உணவு அவர்களுடைய இதய வேட்கையைத் தணிக்கும் தன்மையது.

இயேசு வழங்கிய போதனை நமக்கு உணவு என்பது உண்மையென்றாலும் அவரே நமக்கு உணவாய் இருக்கிறார் என்பதையும் நாம் அறிகிறோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிபட்டபோது அவருக்குப் பலி செலுத்தினார்கள். தங்கள் அன்றாடத் தேவைக்குப் பயன்படுகின்ற ஆடு போன்ற உயிரினங்களைக் கடவுளுக்கு அளித்தபோது தங்களையே கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இயேசு கடவுளின் ஆட்டுக்குட்டியாக வந்தவர். கடவுளுக்குத் தம்மையே சிலுவையில் பலியாக்கினார். அவர் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட அதே சமயத்தில் நமக்கும் உணவாக மாறினார். சிலுவையில் தொங்கிய அவருடைய உடல் நம் ஆன்ம பசியைப் போக்குகின்ற உணவாக மாறியது. இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கிறோம். தம்மையே உணவாகத் தருகின்ற இயேசு நமக்குத் தம் உயிரிலும் வாழ்விலும் பங்களிக்கிறார். அவர் கடவுளோடு என்றென்றும் வாழ்கின்றவர் ஆதலால் அவருடைய வாழ்வில் பங்கேற்கின்ற நாமும் நிலைவாழ்வு பெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் ஆன்ம பசியைப் போக்கியருளும்.