யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-04-13




முதல் வாசகம்

இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:34-42

34 அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, 35 அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது; "இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். 36 சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. 37 இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். 38 ஆகவே இப்போது நீங்கள் இம் மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். 39 அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள். "அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். 40 பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். 41 இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். 42 அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்
திருப்பாடல்கள் 27:1,4,13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? 4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.


நற்செய்திக்கு முன் வசனம்

"உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:1-15

1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். 6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7 பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். 8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார். 10 இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. 12 அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். 13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். 15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் சிறு துண்டும் கிடைக்காதே"

பிரச்சனைகளுக்குத் தீர்வு பணத்தால் கிடைத்து விடுவதல்ல. அல்லது அறிவுத் திறமையால் சாதித்துவிடுவதும் அல்ல. பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் பணத்தை வைத்து தீர்க்கப் பார்க்கிறோம். பத்துப்பேரை வைத்து சாதிக்கலாம் என நினைக்கிறோம். ஆண்கள் மட்டும் ஏறக்குரைய 5000 பேர்,பெண்கள் குழந்தைள் வேறு. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு, அதுவும் மூன்று நாட்கள் பசியாக இருக்கும் கூட்டத்திற்கு ஒரு வனாந்தரத்தில், அக்கம் பக்கம் ஆள் அரவம் இல்லாத இடத்தில்,உணவு கொடுக்க வேண்டும். இது பெரிய பிரச்சனை.

பணத்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால்,திருத்தூதர் பிலிப்பு சொன்னதுபோல இரு நூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காது. இரண்டாவதாக, பணத்தை வைத்து அல்லது பணத்தைக் கொடுத்து, சோறு போட்டு, முட்டை கொடுத்து, சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து செய்யும் முயற்சிகள் எல்லாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதல்ல. பிரச்சனைகளைப் பின் விழைவுகளோடு பெரிதாக்குபவை.

ஆகவே திருத்தூதர் அந்திரேயா காட்டிய வழியே சரியானது. "இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வார்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என அடையாளம் காட்டி, அனைவரின் பங்களிப்புக்கும் அடித்தளமிடுகிறார். கடவுளுக்கு நன்றி செலுத்தியதன் வழியாக ஆன்மீகத்தை கூட்டத்துள் ஏற்படுத்தி, அனைவரையும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாக்குகிறார். பசி பிரச்சனை பறந்தோடுகிறது. ஆகவே ஆன்மீகத்தை அனைத்துப் பிரச்சனையினுள்ளும் அனுமதிப்போம். தீர்வு காண்போம். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.