யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2018-03-12




முதல் வாசகம்

புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 65:17-21

17 இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்: முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை: மனத்தில் எழுதுவதுமில்லை.18 நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். 19 நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்: என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்: இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. 20 இனி அங்கே நில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது: தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்: ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்: திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்
திருப்பாடல்கள் 30:1, 3-5, 10-12

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.

10 ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

12 ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:43-54

43 அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.44 தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.48 இயேசு அவரை நோக்கி, ' அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். ' என்றார்.49 அரச அலுவலர் இயேசுவிடம், ' ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் ' என்றார்.50 இயேசு அவரிடம், ' நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.52 ' எத்தனை மணிக்கு நோய் நீங்கியது? ' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ' நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது ' என்றார்கள்.53 ' உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்'' (யோவான் 4:47)

இயேசு அதிசய செயல்களைச் செய்தார் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ஆனால் ஏன் அவர் அச்செயல்களைச் செய்தார் என்று கேட்டால் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, மனமுவந்து அவர்களுக்கு உதவினார் என நாம் பதிலிறுக்கலாம். இயேசுவின் உதவியை நாடிச்சென்ற மனிதரிடம் அவர் எதிர்பார்த்தது ஆழ்ந்த நம்பிக்கை ஆகும். கானா என்னும் ஊரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அதே ஊருக்கு இன்னொருமுறை சென்றபோது அவரைத் தேடி வருகிறார் அரச அலுவலர் ஒருவர். அவருடைய மகன் சாகும் தறுவாயிலிருக்கிறார். அம்மகனைக் குணமாக்க வேண்டும் என அவர் இயேசுவிடம் மன்றாடுகிறார். ''உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என இயேசு கூறிய சொல்லை நம்பி அரச அலுவலர் புறப்படுகிறார் (யோவா 4:49-50). அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய மகன் பிழைத்துக்கொண்டான் என்னும் நல்ல செய்தி அவருடைய காதுகளை எட்டுகிறது. இந்த அதிசய செயலைக் கண்டு அந்த அரச அலுவலரும் அவருடைய வீட்டாரும் இயேசுவை ''நம்புகின்றனர்'' (யோவா 4:53). அதிசயமான இந்நிகழ்ச்சியை இயேசு தம் சொல்லால் நிகழ்த்தினார் என யோவான் விவரித்துள்ளார் (யோவா 4:50).

இயேசு கடவுளின் வல்லமையோடு செயல்படுகிறார் என்பதை அந்த அரச அலுவலர் முதலிலேயே மனதார ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத் தக்கது. தம் மகன் பிழைத்துக்கொண்டது இயேசுவின் வல்லமையாலேயே என உணர்ந்ததும் அந்த அரச அலுவலர் மீண்டும் ''இயேசுவை நம்பினார்'' (யோவா 4:53). எனவே ''நம்பிக்கை'' என்பது கடவுளின் செயலை நாம் அடையாளம் காண நமக்குத் துணையாகிறது என்பதை நாம் அறிகிறோம். இயேசுவிடத்தில் நம்பிக்கை இல்லாத மனிதருக்கு அவர் புரிந்த செயல்கள் ஆழ்ந்த பொருளுள்ளவையாகத் தெரியாது. ஆனால் இயேசுவிடத்தில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்றும், அவர் இரக்கம் கொண்டால் அதிசயங்கள் நிகழும் என்றும் நாம் ''நம்பிக்கை'' கொண்டால் நம் வாழ்வில் புதுமை மலரும் என்பது உறுதி.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும்.