யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2018-02-28




முதல் வாசகம்

வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் ``வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்'' என்றனர். ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
திபா 31: 4-5. 13. 14-15

அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். பல்லவி

13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, ``இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்று அவர்களிடம் கூறினார். பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். ``உமக்கு என்ன வேண்டும்?'' என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், ``நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்'' என்று வேண்டினார். அதற்கு இயேசு, ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் ``எங்களால் இயலும்'' என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, ``ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்'' என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர். இயேசு அவர்களை வரவழைத்து, ``பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

“துன்பக் கிண்ணம்”!

செபதேயுவின் மனைவி தன் மக்களுக்காக இயேசுவிடம் பதவிகள் வேண்டியபோது, அவர் கேட்ட கேள்வி: “ நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசிர்வாதங்களைப் பகிர்வதற்குச் சமம். கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்குச் சமம். இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் ஆயத்தமா என்று வினவுகிறார். தாங்கள் சொல்வது என்னவென்று உணராமலே அவர்களும் “ஆம்” என்கின்றனர். இயேசுவோ அவர்களின் எதிர்கால பணிவாhழ்வை மனதில் கொண்டு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்கிறார். யாக்கோபும், யோவானும் நல்ல சீடர்கள். அவர்கள் இயேசுவுடன் அப்பத்தையும் பகிர்ந்தனர். துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசிர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் நல்ல உறவு. இன்று நமது உறவுகளை ஆய்வு செய்து நாம் துன்பக் கிண்ணத்திலும் குடிக்கத் தயாராக இருக்கிறோமா? என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.

மன்றாட்டு:

உறவின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் உமது இன்பத்தையும், துன்பத்தையும் பகிர வேண்டும் என எதிர்பார்த்தீரே. நாங்களும் எங்களது உறவுகளில் இன்பங்களை மட்டுமல்ல, துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள அருள் தாரும். ஆமென்