யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-02-27




முதல் வாசகம்

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20

எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள். உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள். ``வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்'' என்கிறார் ஆண்டவர்; " உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 8-9. 16-17. 21,23

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன். 23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறாhர்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'' இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்'' (மத்தேயு 23:9)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் பாராட்டிப் போற்றவேண்டும் என்றும், சிறப்புப் பெயர்கள் சூட்டி தங்களை அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். யூத சமயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அத்தலைவர்கள் ''ரபி'' (போதகர்), ''தந்தை'' போன்ற பெயர்களால் அழைக்கப்படுவதை விரும்பினார்கள். அவர்களைப் பார்த்து இயேசு கூறியது: ''இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்''. சிலர் இயேசு கூறிய இச்சொற்களுக்குத் தவறான விளக்கம் தந்து, இயேசு நாம் யாரையும் தந்தை என அழைக்கலாகாது எனக் கூறுகிறார் என்பர். இது சரியான விளக்கம் அல்ல. இங்கே குறிக்கப்படுகின்ற ''தந்தை'' என்னும் சொல் நம் சொந்தப் பெற்றோரைக் குறிக்க நாம் பயன்படுத்தும் சொல் அல்ல. மாறாக, வணக்கமும் மரியாதையும் பெறும் வண்ணம் அக்கால மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் ''தந்தை'' என அழைக்கவேண்டும் என்று கோரியது சரியல்ல என்பதே இயேசுவின் போதனை. மேலும், கிறிஸ்தவ சபைகளில் தலைமைப் பொறுப்புக் கொண்டவர்களைத் தந்தையர் என அழைக்கும் வழக்கம் உண்டு. இதை இயேசு கண்டனம் செய்தார் என்பதும் சரியாகாது. கடவுள் ஒருவரே நம் அனைவருக்கும் தந்தை. அதே நேரத்தில் கடவுளின் பெயரால் நம்மை வழிநடத்தும் பொறுப்புடையோரை நாம் தந்தையர் என அழைப்பது பொருத்தமே.

போதகர் என்றும் தந்தை என்றும் திருச்சபையில் அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே இயேசுவின் போதனையைப் போதிப்பவர்களாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் தந்தையாகிற கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்பவர்களாக வாழ வேண்டும். அப்போது அவர்களுடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். அக்காலப் பரிசேயரிடமும் மறைநூல் அறிஞரிடமும் இயேசு கண்ட குறை நம்மிடையே தோன்றாது. வெளிவேடம் இல்லாத இடத்தில் உண்மையான பண்பு துலங்கி மிளிரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்து காத்துவருபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.