யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
தவக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2018-02-22

திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா 0




முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திபா 23: 1-3. 4. 5. 6

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி

4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி 5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

“நீ பேறுபெற்றவன்” !

“யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன் ” என்று ஆண்டவர் இயேசு பேதுருவைப் பாராட்டுகின்றார். எதற்காக இந்தப் பாராட்டு? “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ” என்று இயேசுவைப் பற்றிய விசுவாச அறிக்கை இட்டதற்காக. ஆம், இயேசுவைக் கடவுளாக, வாழும் கடவுளின் மகனாக, மெசியாவாக ஏற்று, அதனை அறிக்கை இடுவது என்பது ஒரு பேறு. அந்தப் பேறு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் இரண்டு பில்லியன் மக்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் அந்தப் பேறு கிடைக்கவில்லை. அந்தப் பேறு கடவுளின் கொடை. விசுவாசம் என்பது இறைவன் வழங்கும் இலவசப் பரிசுதானே ஒழிய, மனித உழைப்பின் பயன் அல்ல. இத்தவக் காலத்தில் நாம் சிந்திக்க வேண்டியது: இறைவன் எனக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்கு எனது மறுமொழி என்ன? இயேசுவை “ஆண்டவர்” என்று அறிக்கையிடும் பேற்றினை இறைவன் எனக்குத் தந்துள்ளார். எனது பொறுப்பு என்ன? இத்தவ நாள்களில் இயேசுவை ஆண்டவராக, வாழும் கடவுளின் மகனாக நம் வாழ்வின் மூலம் பறைசாற்றுவோமா!

மன்றாட்டு:

வாழும் கடவுளின் மகனான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை ஆண்டவராகவும், இறைமகனாகவும் அறிக்கையிடும் பேறுபெற்றவர்களாக எங்களையும் மாற்றினீரே. உமக்கு நன்றி. எங்கள் விசுவாச அறிக்கை செயல் வடிவில் மாற்றம் பெற அருள்தாரும். இந்த நாள் முழுதும் எனது ஒவ்வொரு செயலாலும் உம்மை என் ஆண்டவராக அறிக்கை இட அருள்தாரும். ஆமென்.