யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-01-26

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள;




முதல் வாசகம்

வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.
திருப்பாடல்96: 1- 10

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 2ய ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8ய ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, 'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்' என்றார்'' (லூக்கா 10:1-2,5-6)

இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். ''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல'' (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் ''ஊர்களுக்கும்'' ''வீடுகளுக்கும்'' சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் ''எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி'' கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற ''அமைதி'' என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற ''அமைதியும்'' அவர் வழங்குகின்ற ''மீட்பும்'' ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே ''அமைதி'' ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. ''இந்த வீட்டுக்கு அமைதி'' என்பது ''இந்தக் குடும்பத்திற்கு அமைதி'' என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் ''குடும்பத் திருச்சபை'' அல்லது ''வீட்டுத் திருச்சபை'' என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை.

மன்றாட்டு:

இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக ஏற்ற உம் அரும் செயலை வியந்து உமக்கு நன்றி கூறுகிறோம்.