யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2018-01-22




முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7,10

அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: �நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். �நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்� என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.� இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, �நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்� - அதாவது �இங்கே தாவீது வர முடியாது� என்றனர். இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர். தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்.
திருப்பாடல் 89: 19. 20-21. 24-25

19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். -பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். . -பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும். 25 அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். . -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ``இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது'' என்றும் ``பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ``சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.'' `இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது' என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

வலியவர் ஆயுதம் தாங்கி.. !

“வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்” என்னும் இயேசுவின் எச்சரிக்கை மொழிகளை இன்று சிந்திப்போமா?

நமது ஆன்மீக வாழ்வு என்பது ஒரு போராட்டம் நிறைந்த வாழ்க்கை. அதில் நாம் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்ச்சிக்கும் சிங்கம் போன்ற அலகை நம்மைத் தாக்கி, நமது படைக்கலங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு, நம் வாழ்வையும் பங்கிட்டுக்கொள்வான். எனவே, நாம் “ஆயதம்” தாங்கி நம் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டும். எந்த “ஆயுதம்” தாங்கி? இறைவார்த்தை ஓர் ஆயுதம். அன்புச் செயல் என்பது இன்னொரு ஆயுதம். செபம் என்பது இன்னொரு ஆயுதம். இந்த ஆன்மீக ஆயுதங்கள் தாங்கி, நம்மைக் காத்துக்கொள்வோமாக.

மன்றாட்டு:

வலிமையின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. சோதனைகளில் வீழ்ந்துவிடாதபடி நாங்கள் விழித்திருந்து செபிக்கவும், இறைவார்த்தை என்னும் ஆயுதம் தாங்கி எங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளவும், அன்புச் செயல்களால் எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.