யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2018-01-14

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் (1சாமு.3:3-10,19),திருப்பாடல்கள் 40,2,3,6-9,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 கொரி 6:13-15,17-20),யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42))
'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி'. 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி'. 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி'.


திருப்பலி முன்னுரை

புத்தொளி வீசிட, புதுமணம் கமழ்ந்திட புதிய நாள் பிறந்தது, இறைவனின் அருளை இறைபலியினில் பெறவே புனித நாள் புலர்ந்தது.

தமிழ்த்தாயின் மக்களும் என் சொந்தங்களுமாகிய உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன். இறைவனின் திருக்கூட்டமே இன்று நாம் பொதுக்காலம் 2ம் ஞாயிறை சிறப்பிக்கிறோம். இன்றைய இறைவார்த்தை பகுதிகள் நமக்கு வெளிப்படுத்தும் மையக்கருத்து யாதெனில் நாம் அனைவரும் இறைவனின் ஆலயம் என்பதாகும்.

அன்று, இறைநம்பிக்கை கொண்டவர்கள் இயேசு இருந்த இடத்தை பார்த்தார்கள், அவரோடு தங்கினார்கள், இறைசீடர்களாக மாறினார்கள். இன்று, இறைவனுடைய இறைகுலமாய், இருக்கும் நாமும் இறைவனை நமது உள்ளத்தில் ஏந்தி, இறைசீடர்களாக உருமாற அருள் வேண்டி இந்த இறை உறவு பலியிலே பங்கெடுப்போம். இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.முதல் வாசகம்

‘ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்’
இறைவாக்கினர் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் (1சாமு.3:3-10,19)

அந்நாள்களில், கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.அப்போது ஆண்டவர் ' சாமுவேல் ' என்று அழைத்தார். அதற்கு அவன் 'இதோ! அடியேன்' என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர் 'நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்' என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.ஆண்டவர் மீண்டும் 'சாமுவேல்' என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? ' என்று கேட்டான். அவரோ 'நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்' என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர் 'சாமுவேல்' என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? 'என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர் தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டான். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ 'ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் ' என்று பதில் சொல் ' என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல் ' சாமுவேல் ' என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல்'பேசும், உம் அடியேன் கேட்கிறேன் ' என்று மறு மொழி கூறினான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

br>
என் கடவுளே! உமது திருவுளம்நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;

திருப்பாடல்கள் 40,2,3,6-9

2அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார் பல்லவி

3புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்; பல்லவி

6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை;ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.7எனவே, ‛இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; பல்லவி

8என் கடவுளே! உமது திருவுளம்நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது’ என்றேன் நான். 9என் நீதியை நீர் நிலைநாட்டியநற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 கொரி 6:13-15,17-20)

சகோதர சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா ' எனப்படுவாய் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42)

யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து 'அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். 'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா ' எனப்படுவாய் என்றார். 'கேபா' என்றால் 'பாறை ' என்பது பொருள்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

01. நல்ல ஆயனே,

எங்களை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் உமக்கு என்றும் பணிசெய்து, தாங்கள் பெற்றுக் கொண்ட கொடைகளுக்கு நன்றியுள்ளவர்களாக திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

02. அன்பின் இறைவா,

எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும், குழுக்களையும் நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். இவற்றில் நாங்கள் வேற்றுமைகளை களைந்து, உம்மோடு இணைந்து நலமுடன் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

03. சிறார்களை நேசிக்கும் இறைவா,

எம் பங்கின் சிறுவர், சிறுமியரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரும், நாங்களும் துணைபுரியவும், அவர்களுக்கு தேவையான கல்வி ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

04. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!

வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

05. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா!

செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

06. எங்கள் முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா!

இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழும் எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாய் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

07. எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்று திகைத்து நிற்பவர் தெளிவு பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

08. அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும் , உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் : எமது பிள்ளைகள் இறையுறவிலும் , ஒழுக்கத்திலும் , ஞானத்திலும் , கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும் ,செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப் படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

மெசியாவைக் கண்டீர்களா?

இயேசுவோடு தங்கியிருந்து அவரது அன்பையும், ஆற்றல்மிகு வாக்குகளையும் சுவைக்கும் அனுபவம் பெற்ற அந்திரேயா தமது சகோதரர் சீமோனிடம் வந்து சொன்ன நற்செய்தி "மெசியாவைக் கண்டோம்" என்பது. வாழ்வு மாற்றம் நிகழ்த்தும் தியானக்கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெற்ற பலரும் திரும்பி வந்து, அண்டை அயலாரை அழைத்து, "நீங்களும் அந்த தியானத்தில் கலந்துகொள்ளுங்கள்" என்று ஊக்கமூட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. இவை மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி அறிவிப்பு அனுபவங்கள். ஆனால், பெரும்பான்மை கத்தோலிக்கர் "மெசியாவைக் கண்டோம்" என்று பிறரிடம் ஆர்வத்துடன் சொல்ல இயலுவதில்லை, காரணம் இந்த "மெசியா அனுபவம்" அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தியானங்கள், திருப்பயணங்கள், குணமளிக்கும் நிகழ்வுகள், நற்செய்திக் கூட்டங்கள், அறப்பணி சேவைகள்... இப்படி ஏதாவது ஒரு வகையில் நம்மவர்கள் அனைவரும் "மெசியா அனுபவம்" பெறவேண்டும். அதற்கான வாய்ப்புகளை பங்குத் தந்தையர், அன்பியப் பொறுப்பாளர்கள், பக்த சபையினர் ஏற்படுத்தித் தரவேண்டும். "இயேசு அனுபவம்" இல்லாத கிறித்தவ வாழ்வு சாறற்ற சக்கைவாழ்வு என்பதை உணர்வோம். எல்லாரும் இறையனுபவத்தைத் தேடிப்பெற ஊக்குவிப்போம்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கு ஆழ்ந்த இறையனுவத்தைத் தரவும், அந்த அனுபவத்தைப் பெற்றபின், பிறரை அந்த அனுபவத்துக்குள் அழைத்துவரவும் தேவையான ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.