யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2018-01-13
முதல் வாசகம்

சாமுவேல் சவுலுக்குக் கூறியது: �நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4.17-19; 10: 1

அந்நாள்களில் பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர். அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும்விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர். சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, �பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப் போ� என்றார். அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார், அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை. சாமுவேல் சவுலைக் கண்டதும், ஆண்டவர் அவரிடம், இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்� என்றார். சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, �திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்� என்று கேட்டார். சாமுவேல் சவுலுக்குக் கூறியது: �நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.'' அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது: �ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.
திருப்பாடல் 21: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! 2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. - பல்லவி

3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர். 4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். - பல்லவி

5 நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர். 6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ``இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?'' என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ``நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு லேவியிடம், 'என்னைப் பின்பற்றி வா' என்றார். அவரும் எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற்கு 2:14)

இயேசு தம் சீடரை அழைத்த வரலாறு பல விதங்களில் கூறப்பட்டுள்ளது. கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோன் போன்றோரை இயேசு அழைத்தார். அவர்கள் தம் வலைகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். லேவி என்பவர் வரிதண்டும் தொழிலைச் செய்தவர். அவர் வழக்கம்போல சுங்கச் சாவடியில் அமர்ந்து தம் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயேசு அவரை அழைத்தார். லேவியும் ''எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற் 2:14). வரிதண்டும் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. மக்களிடமிருந்து உரோமைப் பேரரசு வரியாகப் பணம் பெற்றது; வேறு பல வரிகளும் மக்களுக்குச் சுமையாயின. வரிதண்டுவோர் தமக்கென்றும் ஒரு பகுதியை அநியாயமாகப் பிரித்தனர். எனவே பொது மக்கள் வரிதண்டுவோரை வெறுத்ததில் வியப்பில்லை. இத்தகைய ஒரு மனிதரையே இயேசு அழைத்தார்.

நம் வாழ்க்கையில் கடவுளின் அழைப்பு எப்போது எவ்வாறு வரும் என நாம் முன்கூட்டியே அறிய இயலாது. ஆனால் கடவுளின் குரல் நம் உள்ளத்தின் ஆழத்தில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாம்தாம் சில வேளைகளில் அக்குரலைக் கேட்க மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம். நம் உள்ளத்தைத் திறந்து வைத்துக் கடவுளுக்கு அங்கே இல்லிடம் அமைத்துக் கொடுத்தால் அவருடைய குரலை நாம் எளிதில் கேட்கலாம். அக்குரல் நம்மிடம் கோருவதை நாம் மனமுவந்து செய்வோம். இயேசுவைப் பின்பற்றிச் செல்வதற்கு வருகின்ற அழைப்பு முதல் படி என்றால் அந்த அழைப்புக்கு நாம் தருகின்ற பதில் மொழி இரண்டாம் படி எனலாம். அவ்வாறு மனமுவந்து நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்லும்போது நம் வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக அமையும். நம் உள்ளத்தில் கடவுள் தரும் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவை மனமுவந்த பின்பற்றிச் செல்ல எங்களுக்கு அருள்தாரும்.