யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை
2018-01-08

ஆண்டவருடைய திருமுழுக்கு – விழா0




முதல் வாசகம்

நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

ஆண்டவர் கூறுவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.
எசா 12: 2-3. 4. 5-6

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். பல்லவி

4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,``இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்'' என்றார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான் அறிவித்ததாவது: “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறைசாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப்போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2)

கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.