யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2017-12-24

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு. 7:1-5,8-12,14,16),பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (16:2-27),லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38))




மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.


திருப்பலி முன்னுரை

அன்பு இறைவன் மாந்தரை மீட்க மானிடராய் வந்ததைக் கொண்டாட ஆவலுடன் அணியமாகிக்கொண்டிருக்கும் அன்புச் சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களை முன்னதாகவே உரியதாக்குகிறேன். இன்று நாம் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றோம்.

நமது உள்ளம் நமது மனம் அருள் நிறைந்ததாக அதாவது நூற்றுக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

ஆண்டவர் என்னோடு இருக்கிறார்
இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு. 7:1-5,8-12,14,16)

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 89: 1-2, 3-4, 26, 28
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

நீர் உரைத்தது; |நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது; உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன். பல்லவி

நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை| என்று அவன் என்னை அழைப்பான். அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (16:2-27)

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38)

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் " என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது " என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! " என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை " என்றார். பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் " என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

01. அன்பு தெய்வமே இறைவா,

எம் திருச்சபையின் தலைவர்களை உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் உமது ஆவியின் அருளைப் பொழிந்து நற்செய்தியை சிறப்புடன் மக்களுக்கு வழங்கி திருச்சபையை சிறந்த முறையில் கட்டி எழுப்ப தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

02. நீதியின் இறைவா,

எம் பங்கு மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உம்மை அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

03. தூயவரான தந்தையே!

உமது பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் ஏழை, எளியவர்களிடத்தில், இரக்கம் உள்ளவர்களாக வாழவும், வியாதினால் வருந்துகின்றவர்களை சந்தித்து ஆதரவு அளித்திடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

04.மாட்டுதொழுவத்தில் பிறந்து உமது எளிமையை எமக்கு எடுத்துரைத்த இறைவா!

எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் இறைஅன்பும், இறைஅச்சமும் நிறைந்தவர்களாகவும், நேர்மையும், கட்டுப்பாட்டும் கொண்டவர்களாக உம் கரம் பற்றி வாழ வரந்தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

05. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!

இந்த நல்ல நாளில் எமக்கு அடுத்திருப்போர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான அன்பும், ஆதரவும், அடைக்கலமும், பொருளாதர வசதிகளை செய்து தர வேண்டிய நல்ல மனதை தந்து இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவை அர்த்தமுள்ளதாய் கொண்டாட வேண்டிய வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்' கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்' அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்' என்றார்'' (லூக்கா 1'30-31)

மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான் மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின் வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர் என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர் உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப் பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.

மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின் சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது. ''இயேசு'' என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும் புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக் குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில் உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில் நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.