யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-12-22




முதல் வாசகம்

சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

அந்நாள்களில் சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.
1 சாமு 2: 1. 4-5. 6-7. 8

ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.'' மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' (லூக்கா 1:42)

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நாளும் மரியா விண்ணேற்பு அடைந்த பெருவிழாவைத் திருச்சபை கொண்டாடுகின்ற நாளும் ஒன்றாக அமைவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய நாடு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அன்னை மரியா மனித குலம் விடுதலை அடையும்போது எந்நிலையை அடையும் எனக் காட்டும் விதத்தில் கடவுளின் அரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாட்சிமை அடைந்தார். விடுதலை என்பது நலிவான நிலையிலிருந்து நலமான நிலைக்குக் கடந்து செல்வதைக் குறிக்கும். அடிமை நிலையிலிருந்து சுதந்திர நிலை அடையும்போதுதான் நாம் விடுதலை என்றால் என்னவென்று உணர்ந்துகொள்ள முடியும். மரியா தம் உறவினரான எலிசபெத்தைச் சந்தித்த வேளையில் அவரை அன்போடு வரவேற்று எலிசபெத்து கூறிய சொற்றொடர் ''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' என்பது. உலகில் வாழ்கின்ற அனைத்துப் பெண்களும் ஆண்களும் கடவுளின் ஆசியைப் பெற்றவர்களே. என்றாலும், மரியா இறைவனால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்துகொள்ளப்பட்டார். கடவுளின் திருமகனுக்கு இவ்வுலகில் தாயாகின்ற பொறுப்பை மரியா ஏற்றார்; கடவுளின் முன்னிலையில் தாழ்ந்து தலைவணங்கி, ''நான் ஆண்டவரின் அடிமை'' (லூக்கா 1:38) என்று மரியா கூறியதோடு கடவுளின் திருவுளத்தை எப்போதும் நிறைவேற்றிட முன்வந்தார். இதனால் கடவுளின் ஆசி அவருக்கு நிறைவாக வழங்கப்பட்டது.

மரியா பெற்ற சிறப்பு கடவுளின் திருவுளத்தைப் பணிந்து ஏற்று அதன்படி செயல்படுவோர் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட சிறப்புக்கு முன்மாதிரியாக உள்ளது. இவ்வாறு, மரியா திருச்சபைக்கு ஓர் முன் அடையாளம். திருச்சபையும் மரியாவைப் போல இறைவனுக்குப் பணிந்து, இறைத்திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றும் கருவியாகச் செயல்பட வேண்டும். அப்போது கடவுளாட்சிக்குச் சாட்சியாகத் திருச்சபை திகழும். கடவுளின் ஆசி நம்மீதும் இந்திய நாட்டின்மீதும் பொழியப்பட வேண்டும் என நாம் மன்றாடுகின்ற சிறப்பு நாள் இது. வீதியெங்கும் விடுதலைக் கீதம் முழங்க வேண்டும். அடிமைத்தனத்தின் சங்கிலிகள் அறுந்து விழ வேண்டும். நம் உள்ளத்தில் உண்மையான சுதந்திரமும் நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் வேரோட்டமான விடுதலையும் விடிந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, விடுதலை தேடி ஏங்குகின்ற கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வில் இன்னும் கோலோச்சுகின்ற அடிமைத்தனங்கள் மறைந்து விடுதலை அனுபவம் விடிந்திட நாங்கள் உழைத்திட அருள்தாரும்.