யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2017-12-10

திருவருகைக்காலம்

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்: 40:1-5; 9-11,திருப்பாடல்: திபா: 85:8-13,திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3:8-14,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 1:1-8)
ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள். ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள். ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள். ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.


திருப்பலி முன்னுரை

“ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.”

இறைமக்கள் அனைவருக்கும் திருவருகைக்கால இரண்டாம் வாரத்தில் இறையருள் பெற வாழ்த்துகிறேன்.

இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம். இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும், திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.முதல் வாசகம்

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்: 40:1-5; 9-11

;ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் ; என்கிறார் உங்கள் கடவுள்.எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். சீயோனே! நற்செசய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: திபா: 85:8-13

நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.! பல்லவி:

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி:

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி:

இரண்டாம் வாசகம்

புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3:8-14

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்: பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவையாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! லூக். 3: 4, 6

"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்|. " அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 1:1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 'இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்: அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் " என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்: தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்: தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் " எனப் பறைசாற்றினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

01. படைப்பின் முதல்வனே இறைவா!

இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை, அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

02. மனமாற்றத்தை விரும்பும் இறைவா!

உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பேரன்பையும், மீட்பையும் கொண்டுள்ள தந்தையே இறைவா!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், எம் சொந்த வாழ்வின் மனமாற்றத்திற்கான வழிகளைக் கண்டடைந்து, எம்மை ஆன்மீகத்திலும், அருள் வாழ்விலும் புதுப்பித்துக் கொண்டு, நீர் மகிழ்வோடும், விருப்போடும் எம்மில் வந்து தங்க எம்மைத் தயார்படுத்த வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நல்வாழ்வைக் காணும்படி செய்யும் தந்தையே!

உலக நாடுகளில் அனைத்திலும் பல்வேறு சவால்கள் மிக வேகமாக உருவாகிவரும் இந்நாட்களில்: பேரன்பும் உண்மையும், நீதியும் நிறைவாழ்வும், மகிழ்வும், உறவும் உலக மக்களிடைய நிலைபெற்று அன்பச் சமூக வாழ்வு மலர்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பே உருவான எம் இறைவா!

இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

'யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்...' எனப் பறைசாற்றினார்'' (மாற்கு 1:7)

மாற்கு நற்செய்தியின் தொடக்கத்தில் நாம் சந்திக்கின்ற முதல் ஆள் திருமுழுக்கு யோவான். இவர் தம்மைப் பற்றி அறிவிக்கவில்லை; மாறாகத் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஒருவரைப் பற்றி அறிவிக்கிறார். யோவான் பாலை நிலத்தில் தோன்றி மக்களை நோக்கி, ''பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று அறிவித்தபோது மக்கள் அவரை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பர். பண்டை நாள்களில் இஸ்ரயேலிலும் யூதாவிலும் தோன்றிய இறைவாக்கினர் இவ்வாறே மக்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று கேட்டனர். யோவான் கூறிய சொற்களைக் கேட்டு பல மக்கள் யோர்தான் ஆற்றில் இறங்கித் திருமுழுக்குப் பெற்றனர். ஏன், இயேசு கூட யோவானின் சொற்களுக்கு இணங்கி, திருமுழுக்குப் பெற்றார். இயேசுவைவிட யோவான் பெரியவரா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்திருக்க வேண்டும். அக்கேள்வி அர்த்தமற்றது என்று பதில்கூறுவதுபோல அமைந்துள்ளது யோவானின் கூற்று: ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்'' (மாற்கு 1:7). யோவான் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் இயேசுவோ கடவுளின் மகனாக நம்மிடையே வந்தார். இந்த உண்மையை யோவானின் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மனிதர் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி இயல்பாகவே எழுவதுண்டு. சிறுவர்கள் விளையாடும்போது யார் அதிகத் திறமையாக ஆடுகிறார்கள் என்று பார்க்க போட்டியில் ஈடுபடுவதை நாம் காணலாம். அதுபோலவே வளர்ந்தவர்கள் நடுவிலும் போட்டி என்பது சில வேளைகளில் மிகக் கடுமையாக இருப்பதும் உண்டு. யோவான் இவ்வாறு போட்டியில் ஈடுபடவில்லை. அவருக்கென்று கடவுள் அளித்த பணி என்னவென்பதை அவர் உணர்ந்தார். அப்பணியை நிறைவேற்றுவதிலேயே அவர் முனைந்திருந்தார். எனவே, இயேசுவைப் பற்றி யோவான் கூறிய சொற்களும், இயேசுவின் வருகைக்குப் பிறகு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று கூறியதும் அவருடைய பணிவான, பண்பட்ட மன நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போட்டி மனப்பான்மை என்பது சில வேளைகளில் கசப்பான விளைவுகளை உண்டாக்கிவிடுவதுண்டு. எப்படியாவது பிறரைத் தோற்கடிக்க வேண்டும் என முனைந்து செயல்படுவோர் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனால் ஏதோ வாழ்க்கையே ஒரு தோல்வியாக மாறிவிட்டதாக நினைத்துச் சோர்ந்துபோவதும் உண்டு. கடவுள் நமக்குத் தருகின்ற பணியை நன்முறையில் ஆற்றுவதே நம் பொறுப்பு என நாம் உணர்ந்தால் வீண் போட்டிகள் நம் எண்ணத்திலிருந்தே மறைந்து போகும்.

மன்றாட்டு:

இறைவா, வீண் பெருமைக்கு இடம் கொடாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.