யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2017-12-06




முதல் வாசகம்

ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: �இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.'' ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
திருப்பாடல்23: 1-3. 5-6.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். இயேசு தம் சீடரை வரவழைத்து, �நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்'' என்று கூறினார். அதற்குச் சீடர்கள் அவரிடம், �இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, �உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?'' என்று கேட்டார். அவர்கள், �ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன'' என்றார்கள். தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அப்பொழுது பெருந்திரளான மக்கள் இயேசுவிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்'' (மத்தேயு 15:30)

இயேசு மகிழ்ச்சி தரும் நல்ல செய்தியை மக்களுக்கு அறிவித்தார். அது மனிதர்களுக்கு நலம் கொணர்ந்த செய்தி. மனிதரின் வாழ்வில் ஏற்படுகின்ற எல்லா இன்னல்களிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கே அச்செய்தி வழங்கப்பட்டது. இவ்வாறு மனிதர் பெறுகின்ற விடுதலையை விவிலியம் பல சொற்களால் விவரிக்கிறது. மனிதரின் உடல் சார்ந்த ஊனங்கள், அவர்களது உள்ளத்தைப் பாதிக்கின்ற ஊனங்கள், அவர்களுக்கும் கடவுளுக்கும் பிற மனிதருக்கும் இடையே நிலவ வேண்டிய நல்லுறவைக் குலைக்கின்ற ஊனங்கள் ஆகிய அனைத்துமே மனிதரைச் சிறுமைப்படுத்துகின்றன. இயேசு கொணர்ந்த விடுதலை மனிதருக்கு முழு நலன் வழங்கவே நமக்கு அருளப்படுகிறது. ''பெருந்திரளான மக்கள் இயேசுவிடம் வருகின்றனர்'' (மத் 15:30). இயேசு வழியாகக் கடவுளே தங்களோடு பேசுகிறார் என்பதை மக்கள் உணர்ந்ததால் அப்போதனையைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமி நிற்கிறார்கள். அவர்கள் இயேசுவிடமிருந்து எதிர்பார்த்தது என்ன? இயேசு நினைத்தால் தங்களுக்கு உடல், உள, ஆன்ம நலன் நல்க முடியும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

இன்று இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற நாம் அக்காலத்தில் இயேசுவின் வல்லமையால் நலம் பெற்ற மனிதர்களைப் போல நலம் பெற முடியுமா? கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர முடியுமா? நம் இதயமும் ஆன்மாவும் கடவுளின் அருளைப் பெற திறந்திருக்கும்போது நாம் கடவுளின் வல்லமையை இன்றும் உணர முடியும். எல்லா மக்களின் முன்னிலையிலும் நிகழ்கின்ற அதிசய செயல்கள் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தை மாற்றி, அதை இறையன்பிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்துகின்ற அனுபவம் நமதாக மாறும். எல்லாரும் கண்டு வியக்கின்ற விதத்தில் உடல் சார்ந்த குணம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தில் நிலவுகின்ற தீமைகளை அகற்றி நாம் நிலைவாழ்வில் பங்கேற்க இறைவன் நம்மில் ஆற்றுகின்ற செயல்களைக் கண்டு நாம் உண்மையிலேயே வியப்படைய வேண்டும். நம் அகக் கண்கள் பார்வையிழந்து இருக்கும் போது நமக்குப் புதுப் பார்வை வழங்குகின்ற கடவுளின் வல்லமையை நாம் வியந்து போற்ற வேண்டும். ஊனமுற்றோரை நாம் இயேசுவிடம் கொண்டு சென்று அவர்கள் நலமடைய வழி வகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு முழு நலன் வழங்குபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.