யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வியாழக்கிழமை
2017-10-26




முதல் வாசகம்

இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை. அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப் படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா? ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
திருப்பாடல்கள் 1: 1-2. 3. 4,6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்'' (லூக்கா 12:49)

நெருப்பு பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு நெருப்பு உதவுகிறது. குளிர் காலத்தில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்காய்வது இதமான அனுபவம். அழுக்குகளைச் சுட்டெரித்து அழிப்பதற்கும் நெருப்பு பயன்படுகிறது. அதே நேரத்தில் நெருப்பு அழிவுக்கும் காரணமாகலாம். கலவரங்கள் ஏற்படும்போது வீடுகளுக்கும் ஊர்களுக்கும் தீவைத்து அழிக்கின்ற செயல்கள் இப்போதும் நடந்துவருவது ஒரு கசப்பான அனுபவம். இயற்கையாகவோ மனிதரின் கவனக்குறைவாலோ காடுகளில் தீ எரிந்து பெரும் அழிவு ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது.

இயேசு இவ்வுலகில் மூட்டவந்த தீ ஆக்கவும் அழிக்கவும் வல்லது. நம்மிடமிருக்கின்ற சுயநலப் போக்கையும் தீய நாட்டங்களையும் அழிக்கின்ற சக்தி அதற்கு உண்டு; அதே நேரத்தில் நம்மைத் தூய்மைப்படுத்தி, நமக்குப் புத்துணர்வு அளித்து, நம்மைப் புடமிட்டுப் புத்தொளி வீசச் செய்கின்ற பண்பையும் இயேசு மூட்டுகின்ற தீயில் நாம் காணலாம். இயேசு கொணர்கின்ற தீ நம்மை மட்டும் மாற்றுவதோடு நின்றுவிடுவதில்லை. அவர் மூட்டுகின்ற தீ நம்மிடமிருந்து பிறருக்கும் பரவ வேண்டும். பிறரும் இறையாட்சியை விரிவடையச் செய்யவேண்டும் என்னும் தீயால் பற்றியெரிய வேண்டும். இதற்கு நாம் கருவிகளாக மாறினால் இந்த உலகமே மாற்றுருப் பெற்று இறையாட்சிக்குச் சாட்சியாக மாறும். இதுவே இயேசு கண்ட கனவு.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புத் தீ எங்கள் உள்ளங்களில் என்றுமே அணையா விளக்காக எரிந்திட அருள்தாரும்.