யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் புதன்கிழமை
2017-10-18

புனித லூக்கா




முதல் வாசகம்

திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4:9-17,

9விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். 10தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னைவிட்டு அகன்று, தெசலோனிக்கா சென்று விட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர். 11என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். 12திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன். 13நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா. 14கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். 15அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். 16நான் முதன்முறை வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக் குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. 17நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
திருப்பாடல் 145;10-13 17-18

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.பல்லவி

11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள் பல்லவி

. 13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.பல்லவி

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.✠ 2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். 3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். 5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். 6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். 7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். 8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். 9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்: புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம்.

மன்றாட்டு:

அன்பே உருவான ஆண்டவரே, எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட ஆணையிட்டுள்ளீர். உம்மைப் போற்றுகிறோம். ஓநாய்கள்போல் எங்களைக் காயப்படுத்தக் காத்திருக்கும் உலகின் தீமைகள் அனைத்தினின்றும் எங்களைக் காத்தருள்வீராக. ஆமென்.