யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
2017-10-15

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்த வாசகம் 25: 6-10,பதிலுரைப்பாடல்: திபா: 23:1-6 ,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14)




தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?


திருப்பலி முன்னுரை

என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக் காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு. சாவை ஒழித்து, பசும்புல் வெளிமீது நம்மை இளைப்பாறச் செய்யும் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

ஆண்டவரின் அருள் நலமும் பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்துவரும்: நாம் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ இறைவன் நமக்கென்று பலவற்றை தயாரித்து வைத்திருக்கின்றார். நாம் அச்சம் அகற்றி நம்பிக்கையோடு வாழ, என்றும் இறைவன் நமக்கு அருகிருந்து நம்மை வழிநடாத்துகின்றார். வலுவும், ஆற்றலும் அளித்து அவர் நம்மைப் பாதுகாக்கின்றார். இந்த உண்மைகளை இன்றயை இறைவார்த்தைகள் உறதிப்படுத்துகின்றன. ஆகவே நாம் அனைவரும் ஆண்டவரை நம் ஆயனாக ஏற்று, அவரே நமக்கு வலுவூட்டுகின்றவர், எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுபவர் என்பதை ஆழமாக விசுவசித்து அவர் காட்டும் வழியைப் பின் தொடர வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்த வாசகம் 25: 6-10

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: ``இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.'' ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
பதிலுரைப்பாடல்: திபா: 23:1-6

ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: பல்லவி:

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்: மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி:

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி:

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி:

இரண்டாம் வாசகம்

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20

சகோதரர் சகோதரிகளே, எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது. என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர் நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில் இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், `நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். பின்னர் தம் பணியாளர்களிடம், `திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்' என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, `தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், `அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.'

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா!

எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுகள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திருஅவையின் அனைத்து நல்மேய்ப்பர்களுக்கும் தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விருந்தின் நாயகனே இயேசுவே,

உலகம் தரமுடியாத இன்பங்களை, மகிழ்ச்சியை, நிறைவை நீர் ஒருவரே தருகிறீர் என்று நான் அறிவேன். இருப்பினும், உம்முடைய அன்பைச் சுவைப்பதற்கு எனக்கு நேரமில்லை. விருப்பமில்லை. உமது அழைப்பை நான் பொருட்படுத்துவதுமில்லை. அத்தகைய நேரங்களுக்காக நான் மனம் வருந்துகிறேன். இயேசுவே, உலகக் கடமைகளில் ஆழ்ந்துவிடாமல், உமது அழைப்பை ஏற்கும் அருளை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடும் தந்தையே!

வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் துயரினை அகற்றி அவர்கள் மகிழ்சியோடும், உடல் நலத்தோடும், அமைதியோடும் விடுதலை பெற்று வாழ்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

இன்று கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் அனைவரும் உமது அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்ந்து, தூய உள்ளத்தோடு உமக்குப் பணிபுரிய அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி வாழவும், சிறப்பாக, ஏழைகள் மீது அக்கறை கொண்டு, அவர்களது நல்வாழ்வுக்காக உழைக்கவும் இவ்வாறு எங்கள் வாழ்வு பிறர்க்கு எடுத்துக்காட்டாக அமையவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

7. ஆதரித்தாளும் எம் இறைவா,

எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்...திருமணத்திற்கு வாருங்கள்'' (மத்தேயு 22:4)

கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ''திருமண விருந்து உவமை'' ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலர். அவர்களில் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்கத் தயங்கினர். ஆனால் பிற இனத்தார் பலர் கடவுளின் அழைப்பை ஏற்று, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அழைப்பை ஏற்று இயேசுவைப் பின்செல்ல வருவோருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அழைப்புக்கு ஏற்ப நடக்காதவர்க்கு உருவகமாகத் ''திருமண ஆடையின்றி வந்தவர்'' (காண்க: மத்தேயு 22:11) குறிக்கப்படுகிறார்.

கடவுள் நமக்குத் தருகின்ற விருந்து நம் உடலை வளர்க்க உதவுகின்ற உணவு மட்டுமல்ல. மனிதரின் முழு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நாம் கடவுளிடமிருந்து கொடையாகவே பெற்றுக்கொள்கிறோம். கடவுள் அளிக்கும் விருந்து வெறும் பொருள்கள் மட்டுமல்ல. இயேசுவின் வழியாகக் கடவுள் நமக்குத் தம்மையே விருந்தாக அளித்துவிட்டார். இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கின்றோம். தம்மையே விருந்தாகத் தரும் கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். நம்மையே விருந்தாகப் பிறருக்கு அளிக்க முன்வரவேண்டும். அப்போது நமக்காகக் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிறைவுக் கால விருந்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்பும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள்கொடைகளை நன்றியோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.