யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






பொதுக்காலம் 26வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-10-06




முதல் வாசகம்

ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22

நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது. ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம். ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.
திபா 79: 1-2. 3-5. 8. 9

கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர். எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். பல்லவி

3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? பல்லவி

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரைத் தாழ்த்தப்படுவாய்'' (லூக்கா 10:15)

நற்செய்தி நூல்களில் கப்பர்நாகும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்கே இயேசு பல புதுமைகள் நிகழ்த்தினார். அங்கிருந்த தொழுகைக் கூடத்தில் இயேசு போதித்தார். நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளரை இயேசு குணமாக்கியது கப்பர்நாகுமில்தான் (லூக்கா 7:1-10). இயேசு தம் சீடராக அழைத்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் கப்பர்நாகும் ஊரைச் சார்ந்தவர்களே (மத் 4:12-22). பேதுருவின் வீடு கப்பர்நாகுமில்தான் இருந்தது. அங்கே இயேசு குடியிருந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்4:13). இவ்வாறு இயேசுவின் தனிப்பட்ட அன்பிற்கும் கரிசனைக்கும் உள்ளான கப்பர்நாகும் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது நமக்கு வியப்பாகத்தான் உள்ளது. ஆக, கப்பர்நாகும் வானளாவ உயர்த்தப்பட்டது உண்மைதான். இயேசுவின் பணியும் வாழ்வும் அங்கே நிகழ்ந்ததால் அவ்வூர் பேறுபெற்றது என நாம் கருதலாம். ஆயினும், அவ்வூர் மக்கள் பலர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

கப்பர்நாகுமில் நிகழ்ந்ததைப் பார்க்கும்போது நம் உள்ளத்தில் எழுகின்ற கேள்வி இது: இயேசுவை நாம் எவ்வாறு அடையாளம் காண்பது? இயேசுவின் புதுமைகளும் ஆழ்ந்த போதனைகளும் மட்டுமே நம்மில் நம்பிக்கையை உருவாக்கிட இயலாது. இயேசுவை அணுகிச் செல்ல நமக்குத் திறந்த மனது வேண்டும். உறைந்துபோன உள்ளத்தில் கடவுளின் குரல் நிசப்தமாகிவிடும். நற்செய்தியைக் கேட்டு, அதன் வல்லமையை உணர்ந்த நமக்கு ஒரு பெரிய பொறுப்பும் வழங்கப்படுகிறது. அதாவது, நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் கண்டுகொள்ளாமல் தடுக்கின்ற தடைச்சுவர்களை நாம் தகர்த்தெறிய வேண்டும். தன்னலமும் ஆணவமும் நம்மை ஆட்கொண்டுவிட்டால் நாம் கடவுளின் அருள்செயலைக் காணத் தவறிவிடுவோம். எனவே, வானளாவ உயர்த்தப்பட்டோர் தாம் பெற்றுக்கொண்ட கொடைக்கு ஏற்ப தங்கள் வாழ்வையும் சீரிய முறையில் வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் வழங்குகின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று உமக்கு உகந்த வாழ்க்கை நடத்திட எங்களுக்கு அருள்தாரும்.