யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் திங்கட்கிழமை
2017-09-04




முதல் வாசகம்

கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்பு கிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிடமாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
திருப்பாடல்கள் 96: 1,3. 4-5. 11-12. 13

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. 5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். -பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30

அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப் பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ``இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், ``நீங்கள் என்னிடம், `மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, `கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது;... அவர் என்னை அனுப்பியுள்ளார்'' (லூக்கா 4:18-19)

எசாயா இறைவாக்கினர் எழுதிய நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதியில் கூறப்படுகின்ற கருத்து இயேசுவின் வாழ்வில் உண்மையாகிறது. அக்கருத்தினை இயேசு தம்முடைய பணித்திட்டமாக அறிக்கையிடுகிறார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் ''ஆவி''யின் செயல் துலங்குவதை நற்செய்தி நூல்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றன. மரியாவின் வயிற்றில் கருவாக உருவான நொடியிலிருந்து இயேசு சிலுவையில் தொங்கித் தம் ஆவியைக் கையளித்த நேரம் வரை ஆவியின் செயல் வெளிப்பட்டது. ஏன், இயேசு சாவிலிருந்து ஆவியின் வல்லமையால் உயிர்பெற்றெழுந்து, தம் சீடரையும் ஆவியால் திடப்படுத்துகிறார். இவ்வாறு கடவுள் இயேசுவின் வழியாகச் செயல்பட்டதை ஆவிக்கு ஏற்றியுரைப்பதை இவண் காண்கின்றோம். கடவுளின் ஆவி தம்மில் தங்கியிருப்பதை உணர்கின்றார் இயேசு. அந்த இறைப் பிரசன்னத்திலிருந்து இயேசுவின் சொல்லும் செயலும் பணியும் பிறக்கின்றன.

கடவுளின் ஆவி நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆவியால் வழிநடத்தப்படும் நாம் ஆவியின் தூண்டுதலைக் கண்டுகொள்ள வேண்டும். அதற்கேற்ப நடக்க வேண்டும். இயேசு எந்த ஆவியால் ''அருள்பொழிவு'' பெற்றாரோ அதே ஆவி திருமுழுக்கின் வழி நம்மையும் நிறைத்துள்ளார். இதனால் இயேசுவின் பணியில் நாமும் பங்குபெறுகின்றோம். ''ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி''யை நாம் செய்வதற்கு ஆவி நம்மைத் தூண்டுகிறார். இயேசுவைப் போல, இயேசுவைத் தொடர்ந்து நம் பணியை ஆற்றிட ஆவி நமக்கு வல்லமை அளிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆவியின் துணையோடு நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.