யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-09-03

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 20:7-9,பதிலுரைப்பாடல்: திபா: 63: 1-5. 7-8,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12:1-2,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21 -27)




ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது. ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது. ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது. மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?. இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.


திருப்பலி முன்னுரை

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்: என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் தூய, உயிருள்ள பலியாக நம்மை ஒப்புக்கொடுக்க ஒன்று கூடியுள்ளோம். இன்றைய இறைவார்த்தைகள், இயலாமையிலிருந்து எழும் மனிதரின் புலம்பலையும், இறைவனின் இரக்கத்தையும், அவருடைய வல்லமையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தாகம் தீர்க்கும் உண்மையானதும், உயர்வானதுமான நீரூற்று இறைவனே. நீரின்றி வறண்ட நிலம் நீருக்காகக் காத்திருப்பது போல மனிதர்களாகிய நாமும் நாளாந்தம் இறைபிரசன்னத்திற்காகக் காத்திருக்கின்றோம்.

மேலும் நம்முடைய வழிபாடுகள் வெறுமனே நாளாந்தச் செயற்பாடுகளாக மாறிவிடக்கூடாது. அவை அர்த்தம் நிறைந்தவையாக இருக்க வேண்டும். அதற்கு மனமாற்றமும், உள்ளம் புதுப்பிக்கப்பட்டு இறைவனுக்குகந்த வாழ்க்கை வாழுவதும் அவசியம் என்ற செய்தியும், நாம் என்றும் கடவுளுக்கு ஏற்புடையதைப்பற்றியே சிந்தித்துச் செயற்படவேண்டும் என்ற அழைப்பும் நமக்குத் தரப்படுகின்றன. இவற்றையெல்லாம் மனத்தில் இருத்தி, தன்னலம் துறந்து, இயேசுவோடு சேர்ந்து பயணிக்க வரம் வேண்டித் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது:
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 20:7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்"கின்றார்கள்.நான் பேசும்போதெல்லாம் "வன்முறை அழிவு" என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. "அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி:கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது:
பதிலுரைப்பாடல்: திபா: 63: 1-5. 7-8

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்: என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது: என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்: கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்: என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்: உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்: உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12:1-2

சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21 -27

அக்காலத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்: ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் " என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார் ? மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்: அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பணியாளருக்குத் துணையாய் இரும் தந்தையே தந்தையே இறைவா!

உம்முடைய பணியாளர்களான எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் தங்கள் பணி வாழ்விலே சவால்களும், தடைகளும், வேதனைகளும் வரும்போது, மனந்தளராமல் உமது அருட்பிரசன்னத்திலும், அருட்கொடைகளிலும் நம்பிக்கை கொண்டு இறைமக்களுக்கு வலுவூட்டும் சக்திகளாகச் செயற்படுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றென்றும் எமக்குத் துணைசெய்யும் தந்தையே!

எங்களுடைய வாழ்வு முழுவுதும் நாம் ஒவ்வொருவரும் உமக்கு ஏற்புடையதைப்பற்றியே சிந்தித்துச் செற்பட்டு, புதுப்பிறப்படைந்து, மனமாற்றம் பெற்றுப் பகிர்ந்த வாழும் இறைமக்கள் சமுதாயமாக வாழ்ந்து, உண்மையான நன்றிப்பலி செலுத்தும் மனப்பக்குவத்தை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் ஊற்றே இறைவா!

எம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உலகத்தின் மாயக் கவர்ச்சிகளில் தங்கள் உள்ளத்தையும், உடலையும் பறிகொடுக்காது, தமது இதயத்தை உமக்காக மாத்திரமே கொடுத்து, உம்முடைய வாழ்வுதரும் வார்த்தைகளை தம் இதயத்தில் சுமந்து உம்மைப் பின் பற்றி நிறைவடையும் நல்லுள்ளத்தை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம் அனைவரினதும் விடுதலையாளராகிய இறைவா!

துன்பம், நோய், வறுமை, அடிமைத்தனம், பொருளாதாரச் சிக்கல்கள், பகைமை, அழிவுகள் போன்றவற்றில் அகப்பட்டு வாடும் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களை எல்லாவிதமான வேதனைகளிலிருந்தும் விடவித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

6. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

கானானியப் பெண்ணின் மகளைப்போல் இன்று தங்கள் பிள்ளைகள் பலர் இவ்வுலகின் தீய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு இறைவனின் பாதையிலிருந்து விலகியிருப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டிக் கண்ணீர் விட்டுச் செபிக்கும் பெற்றோர்க்களின் செபத்தைக் கேட்டு அவர் தம் பிள்ளைகள் மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.

7. மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா,

எம் இல்லங்களில், குடும்பங்களில் வேற்றுமைகள் களையப்பட்டு, அனைவரும் இறைவனின் படைப்புகளே என்ற உயரிய எண்ணங்கள் வளர்ந்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லவும், மனித மாண்பு ஓங்கிடவும் எமக்குத் தேவையான ஞானத்தையும், நற்பண்புகளையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (மாற்கு 8:34)

இயேசு வாழ்ந்த காலத்தில் பெருங்குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சிலுவைச் சாவு ஆகும். அவர்களுடைய தோள்மீது சிலுவை ஏற்றப்பட்டு, அவர்கள் தெருவழியே நடத்திச் செல்லப்பட்டனர். போகும் வழியில் சாட்டையால் அடிக்கப்பட்டனர். இயேசு இக்காட்சியைக் கண்டிருப்பார். இயேசுவின் போதனையைக் கேட்டவர்களுக்கும் சிலுவைச் சாவு என்றால் எத்துணை கொடூரமானது எனத் தெரிந்திருக்கும். இயேசு கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துச் சென்றபோது அவர் ஒரு புரட்சியாளராகத் தென்பட்டார். உரோமை அதிகாரிகளும் யூத சமயத் தலைவர்களும் இயேசுவைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். எனவே, தமக்கும் ஒருநாள் சிலுவை மரணம் வரலாம் என்பதை இயேசு முன்னுணர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் இயேசு சந்தித்த சிலுவைச் சாவு நமக்கு மீட்புக் கொணரும் வழியாயிற்று. இயேசுவைப் பின்பற்றுவோரும் சிலுவைச் சாவைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது கடினமான போதனைதான். சிலுவையைச் சுமந்து இயேசுவின் பின் செல்வோர் அவரைப் போலக் கல்வாரியில் இறக்கவேண்டும் என்பது இன்றைக்கும் உண்மையே. லூக்கா இயேசுவின் இக்கூற்றைச் சிறிது மாற்றி, ''சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு'' என்கிறார் (காண்க: லூக் 9:23). அதாவது, இயேசுவை நம்புவோர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் தம்மையே ஒறுத்து, தன்னலம் துறந்து வாழவேண்டும். ஆக, இயேசுவின் மதிப்பீடுகளைத் தமதாக்கி வாழ்வோர் தம் வாழ்விலும் சாவிலும் இயேசுவை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்பது பொருள்.

மன்றாட்டு:

இறைவா, தன்னலம் துறந்து உம்மை நம்பி வாழ எங்களுக்கு அருள்தாரும்.