யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் திங்கட்கிழமை
2017-08-07




முதல் வாசகம்

இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.
எண்ணிக்கை11;4-15

4 ; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது; "நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? 5 நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்ப+ண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. 6 ஆனால் இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே! " 7 மன்னா கொத்துமலிலி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது. 8 மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. 9 இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது. 10 எல்லா வீடுகளிலுமிருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்துவிட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. 11 மோசே ஆண்டவரிடம் கூறியது; உம் அடியானுக்கு ஏன் இந்தக்கேடு? நீர் எனக்குக் கருணை கட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? 12 இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? "பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்" என்று நீர் சொல்வானேன்? 13 இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, "உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்" என்றும் கேட்கிறார்களே? 14 நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. 15 இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்;
திருப்பாடல்கள் 81;11-16

11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.பல்லவி

12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன்.பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்பல்லவி.

14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.பல்லவி

15 ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்பல்லவி.

16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14;13-21:

இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.16 இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார்.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள்.18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார்.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார்" (மத்தேயு 14:16)

இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் கூட்டம் திரளாக வந்திருக்கிறது. தம்மைத் தேடி வந்த மக்களுக்கு உணவு தேவை என்பதை உணர்கின்றார் இயேசு. மக்கள் ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கவும் வசதி இல்லை. அப்போதுதான் இயேசு தம் சீடரை நோக்கி, மக்கள் புறப்பட்டுச் சென்று உணவு வாங்கிடத் தேவையில்லை என்று கூறுகிறார். மாறாக, அவர் தம் சீடருக்கு ஒரு கட்டளை தருகிறார்: "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இயேசு அப்பங்களையும் மீனையும் பலுகச் செய்த பிறகும் தாமாகவே சென்று மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்துகொடுக்கவில்லை. மாறாக, அவர் தம் சீடர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவர்களும் மக்கள் நடுவே சென்று அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். சீடர்கள் யார்? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள் சீடர்களாக அழைக்கப்பட்டனர். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? மக்களது புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; மக்களது ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு மக்கள் தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். மக்களுடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் உடலையும் இரத்தத்தையும் எங்களுக்கு உணவாக அளித்த உமக்கு நாங்கள் நன்றியறிந்திருக்க அருள்தாரும்.