யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் சனிக்கிழமை
2017-07-29

புனித மார்த்தா




முதல் வாசகம்

9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்
1யோவான் 4;7-16

7 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். 8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். 9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. 10 நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. 11 அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 12 கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். 13 அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்எனவும் அறிந்து கொள்கிறோம். 14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். 15 இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். 16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
திருப்பாடல்கள் 34;1-10

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.பல்லவி r>
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.பல்லவி 3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். r>
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். r>
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லைபல்லவி. r>
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.பல்லவி r>
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம்புகுவோர்பேறுபெற்றோர.பல்லவி r>
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராதுபல்லவி. r>
10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி r>


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11;19-27

அக்காலத்தில்9 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21 மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார். 23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். 24 மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார். 25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' 27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மார்த்தாவிடம், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்றார்'' (யோவான் 11:25)

யோவான் நற்செய்தியில் இயேசு புரிந்த புதுமைகள் ''அரும் அடையாளங்கள்'' என அழைக்கப்படுகின்றன. அதாவது இயேசு மக்களின் நலனுக்காகச் செய்த அதிசயமான செயல்கள் எல்லாம் ஆழ்ந்த ஒரு பொருளின் வெளி ''அடையாளமாக'' இருந்தன. அந்த ஆழ்ந்த பொருளை மக்களுக்கு விளக்கி உரைக்கவே யோவான் நற்செய்தி நூலை எழுதினார். இலாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளாகிய மரியா, மார்த்தா என்பவர்களும் இயேசுவின் நண்பர்கள் (யோவா 11:5). இலாசர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்த இயேசு உடனடியாகச் சென்று தம் நண்பரைக் குணப்படுத்தவில்லை. மாறாக, இலாசர் இறந்த பிறகு இயேசு அவருக்கு அதிசயமான விதத்தில் புதுவாழ்வு வழங்கினார். இதை இயேசு புரிந்த ஓர் அதிசய செயலாக மட்டுமே நாம் பார்க்கக் கூடாது. இந்தப் புதுமையை ஓர் ''அரும் அடையாளமாக''க் கொண்டு, அந்த அடையாளம் உணர்த்துகின்ற ''ஆழ்ந்த உண்மையை'' நாம் கண்டுகொள்ள அழைக்கப்படுகிறோம்.

இவ்வுலகில் பிறக்கின்ற மனிதர் ஒருநாள் இறப்பர் என்பது இயற்கை நியதி. ஆனால் இயேசு நமக்கு ஒரு நாளும் அழியாத வாழ்வை வாக்களிக்கிறார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டால் நாம் ஒருநாளும் அழிந்தொழிய மாட்டோம்; மாறாக, இறைவனோடு ஒன்றித்து எந்நாளும் நிலைத்துநிற்கின்ற வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். இதையே இயேசு இலாசரின் சகோதரியாகிய மார்த்தாவுக்கு உணர்த்தினார். இயேசு மார்த்தாவிடம், ''உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே'' என்று கூறியதோடு அந்த உயிர்த்தெழுதலிலும் வாழ்விலும் நாம் பங்கேற்கும் வழி யாதெனவும் கூறினார். அதாவது ''என்னில் (இயேசுவில்) நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்'' என இயேசு நமக்கு வாக்களிக்கிறார். இயேசுவே சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார்; புது வாழ்வில் புகுந்தார். அவருடைய உயிர்த்தெழுதலில் நமக்கும் பங்கு உண்டு என அவர் நமக்கு வாக்களிக்கிறார். மேலும், இவ்வுலக வாழ்வையும் இறைவனோடு இணைந்த மறுவுலக வாழ்வையும் நாம் கூறுபோட்டுப் பிரித்துப் பார்ப்பது தவறு. இயேசுவை நாம் இவ்வுலகில் ஏற்பதைப் பொறுத்தே நம் மறுவுலக நிலை அமையும். இயேசுவை நம்புவோர் ஏற்கெனவே நிலைவாழ்வைச் சுவைத்துவிட்டார்கள். அந்த வாழ்வின் நிறைவு மறுவுலகில்தான் நமக்கு உரித்தாகும். என்றாலும் இவ்வுலகை நாம் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதைப் பொறுத்துத்தான் நம் மறுவுலக வாழ்வு அமையும் என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தந்துள்ளார்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்களுக்கு நிலைவாழ்வை வழங்குபவர் என நாங்கள் நம்பி, ஏற்று, அதற்கேற்ப வாழ்ந்திட அருள்தாரும்.