யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-07-04




முதல் வாசகம்

ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 19: 15-29

அந்நாள்களில் பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, ``நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்'' என்று வற்புறுத்திக் கூறினார்கள். அவர் காலந்தாழ்த்தினார். ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, ``நீ உயிர் தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப் பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே; மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்'' என்றார்கள். லோத்து அவர்களை நோக்கி: ``என் தலைவர்களே, வேண்டாம். உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப் போவேன். எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்'' என்றார். அதற்கு தூதர் ஒருவர், ``நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான்அழிக்க மாட்டேன். நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது'' என்றார். இதனால் அந்த நகருக்குச் ``சோவார்'' என்னும் பெயர் வழங்கிற்று. லோத்து சோவாரை அடைந்தபோது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான். அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார். அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள். ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார். அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார். கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது.
திபா 26: 2-3. 9-10. 11-12

ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்; 3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன். பல்லவி

9 பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்! 10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக் கையில் நிறையக் கையூட்டு. பல்லவி

11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும். 12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன். பல்லவி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

அக்காலத்தில் இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, ``ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்கள் எல்லாரும், ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?'' என்று வியந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசு நம்மைவிட்டு அகலவேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் செய்தி நமக்குக் கொஞ்சம் வியப்பைத் தருகிறது. கதரேனர் வாழ்ந்த பகுதியில் இயேசு பேய் பிடித்த இருவரை நலப்படுத்துகிறார். அந்தப் பேய்கள் இயேசுவின் அனுமதியுடன் பன்றிகளுக்குள் புக, பன்றிகள் கடலில் வீழந்து மடிகின்றன. எனவே, “நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு. தங்கள் பகுதியைவிட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்”.

இயேசுவும் சற்று வியந்திருப்பார், அந்த மக்களின்மீது பரிவும் கொண்டிருப்பார். காரணம், அவர்களுக்கு விழுமியங்களின் தராதரம் தெரியவில்லை. தங்கள் பகுதியைச் சேர்ந்த இரு மனிதர்கள் பேயின் பிடியிலிருந்து நலம் பெற்றுவிட்டார்களே என்று மகிழாமல், தங்களின் பன்றிகள் மடிந்துவிட்டனவே என்று வருந்துகிறார்கள். அதனால், இயேசுவின் அருமையும் தெரியாமல் அவரையும் தங்கள் பகுதியை விட்டு அகலச் சொல்கின்றனர். அவர்களைப் பற்றி வியப்படையும் நாம் நமது வாழ்வை அலசிப் பார்த்தால், நாமும் ஒருவேளை அந்த நகரினர் போலவே நடந்திருப்போம் எனத் தெரியவரும். நாமும் இந்த உலகின் சிறிய இன்பங்கள், மகிழ்ச்சிகளுக்காக, பேரின்பமாம், நிலைவாழ்வாம் இயேசுவைப் புறக்கணிக்கின்றோம், நம்மை விட்டு அகலச் சொல்கின்றோம். தொலைக்காட்சியையும், அலைபேசியையும் இயேசுவைவிடப் பெரிதாக மதிக்கின்றோம். உண்மை நிலை உணர்வோம், நம் மனநிலைகளை மாற்றிக்கொள்வோம்.

மன்றாட்டு:

ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் மாபெரும் கொடை நீரே என்பதை உணர்ந்து உம்மையே பற்றிக்கொள்ளும் அருள் தாரும், ஆமென்.