யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
பொதுக்காலம் 12வது வாரம் சனிக்கிழமை
2017-06-24

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு




முதல் வாசகம்

கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
திருப்பாடல்கள் 139;1-3,13-15

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். பல்லவி

3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! பல்லவி

14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26

அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து `ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், `மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார். சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ``வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், ``உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, ``குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ``இக்குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ``இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

திருமுழுக்கு யோவான் !

இன்று நாம் திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவர் இயேசுவுக்கும், அன்னை மரியாவுக்கும் தவிர, திருச்சபை கொண்டாடும் ஒரே பிறப்பு விழா திருமுழுக்கு யோவானுக்கு மட்டும்தான். இதிலிருந்தே அவரது சிறப்பையும், தனித் தன்மையையும் அறிந்துகொள்ளலாம். உலகத்திற்கு மீட்பைக் கொண்டு வந்த இயேசுவுக்கே திருமுழுக்கு அளிக்கும் பேற்றினை அவர் பெற்றிருந்தார். மெசியாவைச் சுட்டிக்காட்டும் கொடையையும் அவர் கொண்டிருந்தார். பழைய ஏற்பாட்டின் கடைசி இறைவாக்கினராகவும், புதிய ஏற்பாட்டின் முதல் இறைவாக்கினராகவும் திகழ்கிறார். எனNவு. அவரைப் #8220;புதிய எலியா” என்று அழைப்பது பொருத்தமானதே. மெசியா வருவதற்கு முன் இறைவாக்கினர் எலியா மீண்டும் தோன்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி, யூதர்கள் இயேசுவிடம் வினவியபோது, #8220;எலியா ஏற்கனவே வந்துவிட்டார்” என்று திருமுழுக்கு யோவானைப் பற்றிக் குறிப்பிட்டார் இயேசு. இறைவனின்மீது கொண்ட ஆர்வத்தால் நெருப்பெனப் பற்றியெறிந்த இறைவாக்கினர் எலியா போலவே, திருமுழுக்கு யோவானும் தீயெனப் பற்றி எரிந்தார். இந்த விழாவில் நாமும் இறைவாக்கினராக, இயேசுவைப் பிறருக்குச் சுட்டிக்காட்டுபவராக, ஆன்மீக ஆர்வத்தால் பற்றி எரிபவராகத் திகழும் வரம் வேண்டுவோம்.

மன்றாட்டு:

இயேசுவே, ‘பெண்களின் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை’ என்று திருமுழுக்கு யோவானைப் பெருமைப்படுத்தினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் அவரைப் போல, பிறருக்கு உம்மைச் சுட்டிக்காட்டும் முன்னோடிகளாக வாழ எங்களுக்கு அருள்தாரும் ஆமென்.