யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-06-18

ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3,14-16,திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58 )




விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.


திருப்பலி முன்னுரை

"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்.

"நற்கருணைக்குரியவர்களே,

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு, நற்கருணை வடிவில் எப்போதும் நம்மோடு இருக்கிறார். "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வை கொண்டுள்ளார்" என்ற இயேசுவின் வாக்குறுதி, நற்கருணையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. கல்வாரி பலியின் நிகழ்வாகிய இந்த திருப்பலி கொண்டாட்டம், வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நமக்கு விருந்தாக்குகிறது. இயேசுவின் சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடிக்கும் பேறுபெற்றுள்ள நாம், அவரோடு என்றென்றும் இணைந்திருக்கும் வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நீங்களும் உங்கள் மூதாதையாரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3,14-16

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

இரண்டாம் வாசகம்

அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில் இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எங்கும் இருப்பவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவாசத்தில் வளர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒற்றுமையை அருள்பவரே இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆறுதல் அளிப்பவரே இறைவா,

உலகில் பல்வேறு அச்சுறுத்தல்களாலும், துன்புறுத்தல்களாலும் வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி நிற்கும் மக்களுக்கு, தேவையான ஆறுதலும் உதவியும் கிடைக்குமாறு அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உம்மடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும் உணர்ந்து வாழவும் இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவரும் நற்கருணை குறித்துக் காட்டும் தூய்மையான வாழ்வை வாழ்ந்து தாம் வாழுகின்ற சூழலில் என்றும் ஒளியாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. இயற்கையை படைத்து இவை அனைத்தையும் உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள் என்ற எம் இறைவா!

இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

உண்மையான மீட்பர் இயேசு

இயேசு தான் வாழ்வு தரக்கூடிய உணவு. அதனுடைய பொருள், வாழ்வின் முக்கியத்துவம் இயேசு தான், இயேசு மட்டும் தான். இயேசு இல்லையென்றால் நமக்கு வாழ்வு இல்லை. யூதப்போதகர்கள் மத்தியில் ஒரு சொற்றொடர் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு: பாலைவனத்தில் இறந்த யூதத்தலைமுறையினருக்கு வாழ்வு என்பதே இல்லை. இதனுடைய பொருள் எண்ணிக்கை நூலின் பிண்ணனியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து தப்பித்து, பாலைவனத்தில் தங்கியிருந்தனர். கடவுள் அவர்களை அற்புதமான முறையில் வழிநடத்தினார். ஆனால், அவர்களில் சிலர் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே, அந்த கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை மட்டுமல்ல, மறுஉலக வாழ்வையும் இறந்தனர். அதுபோலத்தான் இயேசுவை நம்பாமல் இருப்பர்களின் நிலையும் கூட. இயேசு நமக்கு வாழ்வு தருவதற்காக வந்திருக்கிறார். அதை நிறைவாகத் தருவதற்காக வந்திருக்கிறார். அவரை ஏற்றுக்கொள்ளாததும், உதறித்தள்ளுவதும் இந்த உலக வாழ்வை மட்டுமல்ல, வரக்கூடிய வாழ்வையும் இழப்பதற்கு சமம். ஆனால், அவரை ஏற்றுக்கொண்டால் இந்த உலக வாழ்வில் நிறைவும், மறுஉலக வாழ்வில் மகிமையும் நமக்கு கிடைக்கும். இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு, அவரை நம்புவதற்கு பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வாய்ப்புகளெல்லாம் இந்த உலக வாழ்வின் நிறைவை அடைய மட்டுமல்ல, மறு உலகின் முடிவில்லா வாழ்வையும் அடைவதற்கும் உதவியாக இருக்கும். எனவே, உண்மையான மீட்பரென்று, இயேசுவை ஏற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நீரே உமது வார்த்தையாலும், அருள் அடையாளங்களாலும் கற்றுத் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். ஆமென்.