யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் சனிக்கிழமை
2017-06-17




முதல் வாசகம்

பாவம் அறியாத கிறிஸ்துவைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார். ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவது இல்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8ய)

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். அல்லேலூயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37

அக்காலத்தில் இயேசு கூறியது: `` `பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும் போது `ஆம்' என்றால் `ஆம்' எனவும் `இல்லை' என்றால் `இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஆணையிடவே வேண்டாம்...நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எனதுவும் தீயோனிடமிருந்து வருகிறது' என்றார்'' (மத்தேயு 5:34,37)

பழைய ஏற்பாட்டு நெறியைப் பல விதங்களில் மாற்றிய இயேசு கடவுளின் பெயரால் ஆணையிடுவதையும் நேர்ந்துகொள்வதையும் விமர்சிக்கின்றார். தாம் கூறுவது உண்மை என்பதை உறுதி செய்வதற்கு மனிதர் கடவுளின் பெயரால் ஆணையிடுகிறார்கள். அதுபோல, கடவுளுக்கென்று நேர்ச்சையாகப் பொருள்களை அளிப்பதும், சில நற்செயல்கள் செய்ய கடவுளுக்கு வாக்களிப்பதும் வழக்கமாக உள்ளது. பொய்யாணை இடுவது தவறு என்னும் போதனை பழைய ஏற்பாட்டில் உண்டு (காண்க: லேவி 19:12; விப 20:16; இச 5:20). ஆனால் இயேசு கடவுளின் பெயரால் ஆணையிடுவதை நாம் எப்போதுமே தவிர்க்க வேண்டும் எனக் கூறுவது தெரிகிறது. மனிதர் ஒருவர் ஒருவரோடு உறவாடும்போது உண்மையின் அடிப்படையில் அந்தப் பரிமாற்றம் நிகழ வேண்டும். எனவே அவர்கள் கூறுவது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் இருக்க வேண்டுமே ஒழிய உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவதாக இருத்தல் ஆகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

எனவே, நாம் உண்மை பேசும்போது அதை உறுதிசெய்ய நாம் கடவுளைச் சாட்சிக்கு அழைக்க வேண்டிய தேவை எழாது. நம் விருப்பம்போல கடவுளைப் பயன்படுத்த நினைப்பது தவறு. அதுபோலவே நம் தலைமீதோ, குடும்பத்தவர்மீதோ ஆணையிட்டுச் சொல்ல வேண்டிய தேவை வராது. இதை இயேசு நமக்குப் போதிக்கிறார். மேலும் நம் தலையிலிருக்கின்ற முடியின் நிறத்தைக் கூட மாற்ற நம்மால் இயலாதபோது நாம் கடவுளைச் சாட்சிக்கு அழைப்பது நகைப்புக்குரியது என இயேசு உணர்த்துகிறார் (மத் 5:36). கடவுளுக்கு நாம் நேர்ச்சையாக அளிப்பதை உண்மையாகவே நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, நேர்மையான மனத்தோடு அளிக்க வேண்டும். நாம் கொடுக்கும் வாக்கைக் காப்பாற்றுவதும் கடமை ஆகும். ஆனால், நேர்ச்சை அளிப்பதுகூட கவனக் குறைவாகச் செய்யப்படுவது தவறாகும். கடவுளை நம் விருப்பத்திற்கு ஏற்ப நாம் ஆட்டிப் படைக்கலாம் என நினைப்பது தவறு. கடவுள் முன்னிலையிலும் சரி, அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் முன்னிலையிலும் சரி நம் வாக்கு உண்மையானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும். எங்கே உண்மையும் நேர்மையும் இல்லையோ அங்கே கடவுளின் உடனிருப்பும் இல்லை. இவ்வாறு இயேசு, ''நேர்ச்சை செய்யும்போது உன் வாயால் சொல்வதைச் செயலில் காட்டு'' (காண்க: இச 23:23) என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு வேரோட்டமான புதிய விளக்கம் அளிக்கிறார். மேலும், நாம் எப்போதும் பேச்சிலும் செயலிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்,

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உண்மையின் ஒளியில் வழிநடக்க அருள்தாரும்.