யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-06-16




முதல் வாசகம்

ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்
2கொரிந்தியர்4;7-15

சகோதர சகோதரிகளே7 இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. 8 நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; 9 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. 10 இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். 11 இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். 12 சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது. 13 "நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். 14 ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். 15 இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
திருப்பாடல்கள் 116;10-11,15-18

10 'மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.பல்லவி

11 'எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு5;27-32

அக்காலத்தில் யேசு தம் சீடர்களுக்கு கூறியதாவது விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக்கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. 29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 31 "தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உள்ளத் தூய்மை

அந்த ஊரில் ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவர் தன்னிடம் வரக்கூடிய மக்களிடம் எல்லாம், மனதை எப்படி தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்று போதித்து வந்தார். ஒருநாள் அவரிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம், “சுவாமி! இதுவரை நான் எந்தத் தவறும் செய்யதில்லை; யாருக்கும் எந்தக் கெடுதலும் கூடச் செய்ததில்லை, அப்படி இருக்கும்போது மனதைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்ற உங்களுடைய உபதேசம் எனக்குத் தேவையா? என்று கேட்டான். ஜென் துறவி அவனிடம், இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் அருகே இருக்கக்கூடிய மரத்தடியில் அமர்ந்துகொள், இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னை வந்து பார்” என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தார்.

அந்த வழிப்போக்கனும் இரண்டு நாட்களும் எதுவும் செய்யாமல் மரத்தடியில் அமர்ந்துவிட்டு, ஜென் துறவியிடத்தில் வந்தான். அப்போது துறவி அவனிடத்தில், எதற்காக உன்னுடைய முகத்தில் இவ்வளவு தூசி படிந்து இருக்கின்றது?, எதற்காக உன்னுடைய சட்டையெல்லாம் இவ்வளவு அழுக்காக இருக்கின்றது? என்று கேட்டார். அவன் தன்னுடைய சட்டையை ஒருகணம் பார்த்தான், குரு சொன்னது போன்று சட்டை மிகவும் அழுக்காக இருந்தது. உடனே துறவி அவனிடத்தில் பேசத் தொடங்கினார், இரண்டு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்க்கே உன்னுடைய சட்டையிலும் முகத்திலும் இவ்வளவு அழுக்குகள் படிந்திருக்கின்றதே, அப்படியானால் இத்தனை நாட்களும் நீ எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருப்பாய், அப்படியானால் உன்னுடைய மனதில் எவ்வளவு அழுக்குகள் படிந்திருக்கும்... இப்படி மனதில் படியும் அழுக்குகளை எல்லாம் அகற்றி, அதனை எப்போதும் நல்ல எண்ணங்களால் வைத்திருக்கவேண்டும் என்பதற்காகத் தான் உபதேசம் செய்கின்றேன் என்றார். ஜென் துறவி சொன்னது விளங்கியது போன்று அவன் தொடர்ந்து அவருடைய உபதேசங்களைக் கேட்கத் தொடங்கினான். நாம் நம்முடைய மனத்தை நல்ல எண்ணங்களால் எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசககத்தில் ஆண்டவர் இயேசு போதிய போதனையைப் போதிக்கின்றார். அதுதான், விபச்சாரம் செய்யாதே எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று என்பதாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் விபச்சாரம் செய்வது என்பது கொலைக் குற்றமாகக் கருதப்பட்டது (விப 20:14, லேவி 20:10). ஆனால், ஆண்டவர் இயேசுவோ பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளையும் சட்டங்களையும் கடந்து, ஒருவரை (ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி) இச்சையோடு பார்த்தாலே அது பாவம் என்கிறார். பாவச் செயல் மட்டுமல்ல, அந்த செயலுக்குக் காரணமாக இருக்கின்ற எண்ணமும் கூட பாவம் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

மன்றாட்டு:

இறைவன் குடியிருக்கும் நம்முடைய உள்ளம் என்னும் ஆலயத்தை எப்போதும் தூய்மையானதாக, மாசற்றதாக வைத்திருக்க உள்ளத்தை நல்ல சிந்தனைகளால் நிரப்புவோம்; தொடர்ந்து நற்காரியங்களைச் செய்வோம்; இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.