யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-05-28

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11,திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20)




நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.


திருப்பலி முன்னுரை

இறைவனில் இனியவர்களே,

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின் வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் " என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? " என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல: ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் " என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவி"ட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் " என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23

சகோதரர், சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே இறைவா!

உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,

இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுமைகளின் நாயகராம் இறைவா,

பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால் உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. அமைதி தருபவரே இறைவா,

உலகெங்கும் நோய், பசி, வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் மனக்கலக்கம் அடைந்து வருந்துகின்ற அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. உன்னதரான தந்தையே!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்

மார்ச் 20, 2008 தினமலர் செய்தி : தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும், ' டூம்ஸ் டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில் ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள் உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளியே வர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணேற்பு இப்படி தவறாக புறிந்துகொள்ளப்பட்டுள்ளது. விண்ணேற்படைந்த இயேசுவின் கடைசி வேண்டுகோளை ஆழ்ந்து தியானிப்போம். "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்." அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி, நாம் வாழும் இப்பூமியை, அதன் மனிதர்களோடு, அவர்களின் கலாச்சாரத்தோடு, புதிய வானமாக, புதிய பூமியாக, புதிய எருசலேமாக மாற்றி, புதுப்படைப்பாக்க வேண்டும்; மூவொரு இறைவன் பெயரால் திருநிலைப்படுத்தப்பட்ட இச் சீடர்கள் இப்பணியை இவ்வுலகில் உலகம் முடியும் வரை தொடர்ந்து ஆற்ற வேண்டும். "உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற நற்கருணை தெய்வம், அன்புச் சமூகம் உருவாக்கும் பணியைச் செய்ய நம்மை அழைக்கிறார். அதுவே அனைவரின் விண்ணேற்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.