யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-05-14

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 6:1-7,திருப்பாடல் 33:1-2,4-5, 18-19,திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:4-9,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:1-12)




வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர் வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர் வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர் வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர் வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர்


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், இன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

வழியும் உண்மையும் வாழ்வுமான நம் ஆண்டவர் இயேசுவின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம். கலக்கத்தோடும், கண்ணீரோடும், ஏக்கத்தோடும், இழப்புக்களோடும் வாழுகின்றவர்களுக்கு: மாபெரும் நம்பிக்கைச் செய்தியொன்று கொடுக்கப்படுகின்றது. நான் சொல்வதை நம்புங்கள்: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார் என்பதே அச்செய்தியாகும். ஆகவே நாம் அனைவரும் இறைவனில் எப்பொழும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அவரில் மகிழுவோம். அவர் மக்களாய் வாழ இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 6:1-7

அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்" என்று கூறினர்.திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33:1-2,4-5, 18-19

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்:பல்லவி:

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.பல்லவி:

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.பல்லவி:

இரண்டாம் வாசகம்

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:4-9

அன்புக்குரியவர்களே, உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே.நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், "இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்" என்று மறைநூலில் காணக்கிடக்கிறது. நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று. " மற்றும் அது, "இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும்" இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள்: இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்: அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:1-12

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், "உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்" என்று கொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார். தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார். இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையம் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். அப்போது பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்: அதுவே போதும்" என்றார். இயேசு அவரிடம் கூறியது: "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்: தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்: என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்: ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் நல்லாயன் இயேசுவின் வழியில் இறைமக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மை ஆயரே இறைவா,

ஆறுதல் தரும் வார்த்தைகளைக் கொண்ட இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உள்ளம் கலங்க வேண்டாம் என்னும் உமது வார்த்தைகளுக்காக நன்றி ஆண்டவரே! நீர் காட்டும் பாதையில் நடந்து, கலக்கமின்றி வாழும் வரம் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு, அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால், பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

உள்ளம் கலங்க வேண்டாம் !

உள்ளம் கலங்க வேண்டாம்” என்னும் ஆறுதல் தரும் வார்த்தைகளோடு இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. கடவுளிடமும், தன்னிடமும் நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கிறார் இயேசு. இயேசு எங்கே போகிறார் என்று சீடர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், இயேசுவிம் அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இயேசுவே வழி என்று ஏற்றுக்கொண்டனர். இயேசு வழியாகவே தந்தையிடமும், நிறைவாழ்விடமும் செல்ல முடியும் என்று நம்பினர். நமக்கும் இந்த அழைப்பு இன்று விடுக்கப்படுகிறது. இயேசு வழியாகவே நமக்கு நிறைவாழ்வு உண்டு என்று நம்பினால், நாம் உள்ளம் கலங்க வேண்டியதில்லை. பல நேரங்களில் தேவையற்ற கவலைகளிலும், கலக்கங்களிலும் நாம் மூழ்கிவிடுகிறோம். வழி தெரியாமல் தவிக்கிறோம். அந்த நேரங்களில் உள்ளம் கலங்க வேண்டாம் என்னும் இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம்.

மன்றாட்டு:

ஆறுதல் தரும் வார்த்தைகளைக் கொண்ட இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உள்ளம் கலங்க வேண்டாம் என்னும் உமது வார்த்தைகளுக்காக நன்றி ஆண்டவரே ! நீர் காட்டும் பாதையில் நடந்து, கலக்கமின்றி வாழும் வரம் தாரும். ஆமென்.