யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2017-04-29




முதல் வாசகம்

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 6:1-7

1 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். 2 எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. 3 ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். 4 நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்" என்று கூறினர். 5 திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கோலா, தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து 6 அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். 7 கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல்கள் 33:1-2, 4-5, 18-19

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது'' (யோவான் 6:11)

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு புரிந்த பல அருஞ்செயல்களைப் பதிவுசெய்துள்ளனர். ஒரு நற்செய்தியாளர் குறிப்பிடும் அருஞ்செயல் பிற நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமான விதத்தில் இயேசு உணவளித்தார் என்னும் அருஞ்செயல் மட்டுமே நான்கு நற்செய்தியாளர்களாலும் தவறாமல் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (மத் 14:13-21; 15:32-38; மாற் 6:31-44; 8:1-10; லூக் 9:10-17; யோவா 6:1-15). இயேசு அப்பங்களை ''எடுத்தார்''; ''கடவுளுக்கு நன்றி செலுத்தினார்''; ''மக்களுக்குக் கொடுத்தார்'' என இந்நிகழ்ச்சியை யோவான் விவரிப்பது அன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் நிகழ்ந்த ''நற்கருணைக் கொண்டாட்டம்'' நிகழ்ந்த முறையை அழகாக எடுத்துக்கூறுகிறது.

இயேசு புரிந்த அருஞ்செயலைக் கண்ட மக்கள் இயேசுவே கடவுளால் தரப்பட்ட உணவு என்பதைக் கண்டுகொள்கிறார்கள். எனவே, அவர்கள் ''உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே'' என அறிக்கையிடுகிறார்கள் (காண்க: யோவா 6:14). இயேசு மக்களுக்கு உணவளித்தது அவர் தம்மையே நமக்கு உணவாக அளித்ததற்கு அடையாளம் ஆயிற்று. இன்று நாம் கொண்டாடுகின்ற நற்கருணை இவ்வுலகில் பசியால் வாடுகின்ற மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கடமையை நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கடவுள் நமக்கு வெளிப்படுத்துகின்ற அன்பு நம் வாழ்வில் பிறரன்பாகப் பரிணமிக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது. நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது ''வார்த்தை வழிபாடு'' என்னும் பகுதியும் ''திருவிருந்து வழிபாடு'' என்னும் பகுதியும் உண்டு. இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இயேசு கடவுளின் ''வார்த்தை''யாக நம்மிடையே வந்தார். அவரே கடவுளின் ''வார்த்தை''யை நமக்கு அறிவித்தார். அதே நேரத்தில், இயேசு தம்மையே நமக்கு ''உணவாக'' அளித்தார். ஆக, இயேசுவின் வார்த்தையும் அவருடைய உடலும் நமக்கு உணவாக உள்ளன. இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் அவரிடமிருந்து வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!