யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா எண்கிழமையில் செவ்வாய்க்கிழமை
2017-04-18




முதல் வாசகம்

மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.'' அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார். மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
திருப்பாடல் 33: 4-5. 18-19. 20. 22

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், ``ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார். இயேசு அவரிடம், ``மரியா'' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள். இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்'' என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான்ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசுவின் உயிர்ப்பு அழுகையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மாந்த உணர்வுகளில் ஒன்றான துயரத்தை, அழுகையைப் போக்குகிறது என்னும் நற்செய்தியை இன்றைய வாசகத்தில் காண்கிறோம். இயேசுவின் இறப்பினால் பெரிதும் துயருற்ற மகதலேன் மரியா "கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்". வெண்ணாடை அணிந்த தூதர்கள் அவரிடம் " அம்மா, ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டு, அவருக்கு ஆறுதல் அளிக்க முன்வருகின்றனர். பின்னர், இயேசுவும் அவருக்குத் தோன்றி, "ஏன் அம்மா அழுகிறாய்?" எனக் கேட்கிறார். மரியா தமது துயரத்தை எடுத்துரைத்ததும், இயேசு அவரை நோக்கி, "மரியா" என்று சொல்ல, மரியா திரும்பிப் பார்த்து, அவரை இயேசு எனக் கண்டுணர்ந்து, "ரபூனி", "போதகரே" என்கிறார். இந்த நொடியில் அவரது துயரம், அழுகை அனைத்தும் களையப்பட்டு, பெருமகிழ்வு உண்டாகிறது. அவரை இயேசு உயிர்ப்பின் செய்தியாளராகத் தமது சீடர்களிடம் அனுப்புகிறார்.

நமது வாழ்வின் துயரங்கள், அழுகை அனைத்தையும் போக்கும் ஆற்றல் இயேசுவின் உயிர்ப்புக்கு உண்டு. "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16: 20) என்று தமது இறப்புக்கு முன்னால் இயேசு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி அவரது உயிர்ப்பிலே நிறைவேறுகிறது. எனவே, சாவு, நோய்கள், தனிமை, மன அழுத்தம், கடன் தொல்லைகள், குடும்ப சமாதானமின்மை... போன்றவற்றால் கண்ணீர் விட்டு, அழுது புலம்பும் அனைவரும் உயிர்ப்பின் நாயகனாம் இயேசுவைத் தேடி வரட்டும். அவர் கண்ணீரைக் களிநடமாக மாற்றுவார்.

மன்றாட்டு:

சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அழுதையையும், துயரத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆறுதலை உமது ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.