யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-04-07




முதல் வாசகம்

ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

அந்நாள்களில் எரேமியா கூறியது: `சுற்றிலும் ஒரே திகில்!' என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; `பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்' என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; `ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!' என்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திபா 18: 1-2ய,3. 4-5. 6 (பல்லவி: 6ய)
பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.

1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. பல்லவி

6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
யூதர்கள் மறுமொழியாக, ``நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்'' என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, `` `நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை `இறைமகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக `இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்'' என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர்.
அவர்கள், ``யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று'' எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான்"

இயேசுவின் வாழக்கையைப் பின்தொடர்ந்தால் திரும்பத் திரும்ப கேள்விப்படும் செய்தி அதிர்ச்சியைத் தரும். "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்"(யோவா10:20) என்ற ஆவதூறு. "அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்."(யோவா10:39 "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?" என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.(யோவா9:34) "அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.(யோவா8:59) "அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்"(யோசா.7:32)

இத்தனை நடந்தும், சிறிதும் மனம் தளராது, இயேசு தன் இலட்சியத்தில் சிறிதும் பிறழாது உறுதியுடன் துணிந்து முன்னேற காரணமாய் இருந்ததென்ன? "தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான்" என்ற ஒரே இறை அனுபவம் தவிற வேறெதுவும் இல்லை. யாரிடம், எங்கு, எதற்கு, நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம், அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறோம், அனுப்பப்பட்டிருக்கிறோம் என்ற தெழிவு இருக்கிறதோ, அவர்களிடம், அப்பணிகளில் அர்ப்பணத்திற்கும் குறைவிருக்காது. எதையும், ஏன் தன் இன்னுயிரையும் இன்முகத்தோடு இத்தகையோர் இழப்பதற்கும்; தயங்கார்.

இயேசு இத்தகையோர் முதலும் முழுமையும். இந்த இயேசுவாலும் இத்தகையோராலும் மட்டுமே இந்த உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது, வளர்ந்துகொண்டிருக்கிறது. திருமுழுக்கால் அர்ப்பணிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நாமும் இத்தகைய வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ் வாழ்க்கையை வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, யூத குலத்தில் பிறந்து வளர்ந்த இயேசுவை மீட்பராக ஏற்கும் நாங்கள் எல்லா மனிதரையும் உம் பிள்ளைகளாக ஏற்றிட அருள்தாரும்.