யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-04-02

தவக்காலத்தின் 5ம் ஞாயிறு

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து வாசகம்.37:12-14,பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 8:8-11,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 11:1-45)




உயிர்த்தெழுதலும் வாழ்வும்நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார் ஆண்டவர். உயிர்த்தெழுதலும் வாழ்வும்நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார் ஆண்டவர். உயிர்த்தெழுதலும் வாழ்வும்நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார் ஆண்டவர். உயிர்த்தெழுதலும் வாழ்வும்நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார் ஆண்டவர்.


திருப்பலி முன்னுரை

உயிர்ப்புக்குரியவர்களே,

உயிரும் உயிர்ப்புமான ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கிறோம். நம் ஆண்டவர் உயிர்த்தெழுதலும் வாழ்வுமாய் இருக்கிறார் என்ற உண்மையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நண்பரின் இறப்புக்காக, ஆண்டவர் இயேசு கண்ணீர் விட்டு அழுததை இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகிறது. பாவத்தினால் நாம் கடவுளின் அருள் உயிரை இழக்கும் போதெல்லாம் ஆண்டவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறந்த லாசரை, இயேசு மீண்டும் உயிர்த்தெழச் செய்ததையும் நாம் காண்கிறோம். நாம் பாவத்தினால் அருள் வாழ்வில் இறந்தாலும், நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவர் தயாராக இருக்கிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் வல்லமையால் பாவத்தில் இருந்து உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து வாசகம்.37:12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். "ஆண்டவராகிய நான் உரைத்தேன்: நானே இதைச் செய்தேன் " என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 130: 1- 8.
பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம் முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின் றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். பல்லவி

விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

இரண்டாம் வாசகம்

இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார்,.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 8:8-11

சகோதர சகோதரிகளே! ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்: அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

'உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 11:1-45

பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உன் நண்பன் நோயுற்றிருக்கிறான் " என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் " என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் " என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், "ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்: மீண்டும் அங்குப் போகிறீரா? " என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை: ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. "ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்: ஏனெனில் அப்போது ஒளி இல்லை " என்றார்." இவ்வாறு கூறியபின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்: நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் " என்றார். அவருடைய சீடர் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் " என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்து விட்டான் " என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்: ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் " என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார். இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார். இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், "போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றி விடுங்கள்" என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்றார். இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1 உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா!

எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் உலகின் ஒளியாம் இறை இயேசுவின் வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்று உமக்கு உகந்தவராகவும், பணிவாழ்வில் உமக்கு உகந்தவற்றையே நாடவும் பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. வாழ்வளித்து வழிநடத்துபவரே இறைவா,

உம் மீது நம்பிக்கை இல்லாமலும், உம்மைப் பற்றிய தவறான எண்ணங்களாலும், ஆன்மீக வாழ்வில் இறந்தவர்களாய் வாழும் மக்களிடையே விசுவாசத்தின் ஒளியை ஏற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. கல்லறையைத் திறப்பவரே இறைவா,

உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து நடைபிணங்களாய் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் மீது கட்டி எழுப்பியுள்ள கல்லறைகளில் இருந்து வெளியேறி உமது மாட்சியைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆவியைப் பொழிபவரே இறைவா,

சிந்தனை, சொல், செயல் அனைத்தாலும் பாவங்கள் செய்து, உமது அருளுயிரை இழந்து தவிக்கும் மக்கள் அனைவருக்கும் உமது தூய ஆவியால் புத்துயிர் அளித்து உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. எளியவர்க்கு இரங்கும் இறைவா!

எங்கள் இடுக்கண்களையும் பலவீனங்களையும் நீ நன்கு அறிவீர். நாங்கள் எவ்வளவுக்கு வலுவற்றவர்களாக இருக்கின்றோமோ அவ்வளவுக்கு நீர் உறுதுணை தந்து எங்களை வலுப்படுத்துகிறீர். உமது கொடையாக நாங்கள் பெற்றுள்ள இந்த ஒப்புறவுக் காலத்தை நன்றியுடன் பயன்படுத்தி எங்கள் வாழ்வைப் புதுப்பிக்க வேண்டிய வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

சமாரியப் பெண் உம்மை மீட்பர், நிலைவாழ்வுத் தரும் ஊற்று என்பதைக் கண்டு கொண்டு மற்றவர்களுக்கும் உம்மை அறிவித்தது போல நாங்களும் உமது இரக்கத்தையும், அன்பையும் இத்தவக்காலத்தில் உய்த்துணர்ந்து, உம் சீடர்கள் என்ற உணர்வைப் பெற்றுச் செபம், தவம், தர்மம் ஆகியவற்றின் மூலம் இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்பட வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...

7. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

வேதனை நிறைந்த எங்கள் மனங்களில் எதிர்கால வாழ்வை நினைத்து, கிடைத்த வாழ்வை, பெற்ற மகிழ்ச்சியை, உறவுகளை இழக்காமல் எம் குடும்பங்களில் ஒற்றுமையையும், மற்றவாகளை மன்னித்து எம் சகோதரச் சகோதரிகளாய் பாவித்துச் சாமாரியப் பெண்ணைப் போல எங்கள் தவறுகளை ஏற்று அனைவரையும் அன்புப் பாரட்ட வேண்டிய மனஉறுதியையும், அவற்றைச் செயலில் காட்டு விவேகத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

".. ..என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."

மரண பயம் யாருக்கு? சாவைச் சந்திப்பவனுக்கா? அருகில் இருப்பவனுக்கா? சாவைச் சந்திப்பவன்கூட பயப்படுவதில்லை. அவர்கள் மறை சாட்சிகள், கொள்கை வீரர்கள். புனிதர்கள், புலிகள். சில தொண்ணூறுகளும் சாவைக்கண்டு பயப்படுகிறது. வேறு சில இருபதுகள் கொள்கைக்காகச் சாவைத் தேடிச் செல்கிறது. கூட இருந்தவனுக்குப் பயம். அடடே இவனை நம்பி இருந்தேனே, எல்லாம் முடிந்துவிட்டதே. இப்படி திடுதிப்பென்று போய்விட்டானே. பாவத்தில் வாழ்பவனும், அருள் நிலை இழந்தவனும்,கொள்கை இல்லாதவனும் இந்த சாவைக்கண்டு பயந்து தினமும் செத்துக்கொண்டிருக்கும் நடை பிணங்கள். உண்மையைச் சொல்ல பயம், நியாயத்தை பேச பயம். தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்குக் கவசத்திற்காகக் கல்லறையை தேர்ந்துகொண்ட புத்திசாலிகள். "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்னும் நம்பிக்கை வார்த்தைகளால் மரணத்திற்கு உயிர்ப்பு கொடுக்கிறார் இயேசு. சிலரை இந்தச்சமுதாயம் வாழவிடாமல் கட்டி, அடக்கி, அமிழ்த்தி, பெருஞ்சுமையைப் புரட்ட முடியாப் பாராங்கல்லாய் வைத்து சமாதியாக்கிவிடுகிறது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்"என்று மீண்டும் ஒரு வாழ்வை வழங்குகிறார் இயேசு.

இன்று இறப்புக்கள் பல விதம். உடலின் உயிர் பிரிவது ஒரு இறப்பு. உன்னில் ஆன்மீகம் அழிவதும் இறப்பு. அறிவு அழிவதும் இறப்பு. நற்பண்பு, அறநெறி,பண்பாடு,கலாச்சாரம் அழிவதும் இறப்பு, பொருளாதாரம் பற்றாக்குறை ஏற்படுவதும் இறப்பு. இந்த அழிவுகளால் எல்லாம் முடிந்துவிட்டது. நான்கு நாட்களாகிவிட்டது, நாற்றமடிக்குமே என்று நைந்துவிட அவசியமில்லை. நம்பிக்கையுடையவன் இதை புது வாழ்வுக்குச் சாதகமாக்கிக்கொள்கிறான். குழந்தை இளைஞனாகும்போது குழந்தை தன்மை அழிவது இறப்பு அல்ல, வளர்ச்சியின் ஒரு கட்டம். இளம்பெண் தாயாவது அழிவு அல்ல, புது வாழ்வின் ஒருபடி. ஆகவே இறப்பு என்பது புதிய ஒன்றை உருவாக்கும் பாதை. இறப்பையும் இழப்பையும் தாண்டி புது வாழ்வைப் பெறுவதுதான் இயேசு கற்றுத்தந்த வாழ்க்கைத் தத்துவம்.இதை நம்பி, இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, இருளிலிருந்து ஒளிக்கு எங்களை வழிநடத்தும்.