யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2017-03-13




முதல் வாசகம்

எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு.
தானியேல் நூலிலிருந்து வாசகம் 9:4-11

4 என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது: என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!5 நாங்கள் பாவம் செய்தோம்: வழி தவறி நடந்தோம்: பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்.6 எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவி கொடுக்கவில்லை.7 என் தலைவரே! நீதி உமக்கு உரியது: எம்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விர8 ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.9 எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்துநின்றோம்.10 எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.11 நாங்களோ அவரது குரலொளியை ஏற்கவில்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும் எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மைனடத்தாதேயும்
திருப்பாடல்கள் 79:8,9,11,13

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம்.


நற்செய்திக்கு முன் வசனம்

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:36-38

6 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.37 ' பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தீர்ப்பு அளிக்காதீர்கள் !

பிறரைத் தீர்ப்பிடுவது என்பது எளிதாக நம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. நீ செய்வது தவறு”, அவன் செய்வதற்கு அவன் அனுபவிக்கிறான்” என்றெல்லாம் நாம் அடிக்கடி பேசுகிறோம். பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு நமக்கு எளிதாக இருப்பது ஏன் என்பதற்கு உளவியலாளர்கள் இரண்டு காரணங்களைத் தருகிறார்கள்: 1. அடிப்படையில் இந்த உலகம் குறைகள் நிறைந்ததாக இருக்கிறது. உலகில் நிறைகளைவிடக் குறைகளே அதிகமாக இருப்பதினால், பிறரது குறைகளே நமது கண்ணுக்கும் மனதுக்கும் முதலில் தென்படுகின்றன. 2. அதைவிட மேலாக, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற குறைகளையே, நாம் பிறர்மீது ஏற்றிப் பார்க்கிறோம். இதன் காரணமாகவே, நாம் பிறரைத் தீர்ப்பிடும் பழக்கத்தில் எளிதில் விழுந்துவிடுகிறோம் என்கின்றனர் இவர்கள். இருப்பினும், இறையியல் பார்வையில், ஆன்மீகப் பார்வையில் தீர்ப்பிடுவது என்பது தவறு, நாம் அத்தவறிலிருந்து விடுபட வேண்டும். அப்போதுதான், நாமும் தீர்ப்புக்குள்ளாக மாட்டோம் என்னும் உறுதியை இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நாம் மேற்கொள்வோம்.

மன்றாட்டு:

தீர்ப்பிடாதீர்கள் என்று எடுத்துச் சொன்ன இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிறரைத் தீர்ப்பிடும் கண்களால் நோக்காமல், உம்மைப் போல, பரிவின் கண்களால் நோக்கும் அருளைத் தாரும். ஆமென்.