யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் வியாழக்கிழமை
2017-02-23




முதல் வாசகம்

ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல, காலம் தாழ்த்தாதே.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 5: 1-8

உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; `எனக்கு அவை போதும்' எனச் சொல்லாதே. உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே; உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே. எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்? எனச் சொல்லாதே; ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார். `நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?' எனக் கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர். பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே. `ஆண்டவரின் பரிவு எல்லையற்றது; எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார்' என உரைக்காதே. அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன; அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும். ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே. நாள்களைத் தள்ளிப்போடாதே. ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்; அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய். முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 1: 1-2. 3. 4, 6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால் அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவ காலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 41-50

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது'' (மாற்கு 9:43)

பாவம் என்பது கடவுளின் விருப்பப்படி நாம் நடக்காமல் நம் சுய நலப் போக்கிலே நடப்பதைக் குறிக்கும். ஒருவர் நன்னெறியில் செல்லாமல் தவறான வழிகளில் சென்றால் அது ஏற்கத் தகாதது. ஆனால் பிறரையும் தவறான வழியில் நடக்கத் தூண்டுவது அதைவிடப் பெரிய குற்றமாகக் கருதப்படும். இயேசு இத்தகைய குற்றத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ''பிறரைப் பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டிச் கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது'' (மாற் 9:42) என இயேசு கற்பிக்கிறார். கை, கால், கண் போன்ற உடல் உறுப்புகளை இழந்தாலும் கூட நாம் பாவம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என இயேசு கூறுவது மிகைக் கூற்றாகப் படலாம். நம் உடல் உறுப்புகளைத் துண்டிக்க வேண்டும் என்பதல்ல கருத்து. மாறாக, பாவம் என்பது நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்கின்ற தீய சக்தியாக இருப்பதால் அதை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். பாவம் செய்வோர் ''அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவர்'' (காண்க: மாற் 9:43) என்பதன் பொருள் என்ன?

இங்கே ''நரகம்'' என வரும் சொல் எபிரேயத்தில் ''கெகன்னா'' என்பதாகும். இது ''கெ பென்-ஹின்னோம்'' என்னும் எபிரேயச் சொல்லின் கிரேக்க-இலத்தீன் வடிவமாகும். அதற்கு ''பென் இ(ஹி)ன்னோம் பள்ளத்தாக்கு'' என்பது பொருள் (காண்க: 2 அர 23:10). அதாவது ஹின்னோம் என்பவரின் மகனோடு தொடர்புடைய பள்ளத்தாக்கு எனப் பொருள். இது எருசலேம் நகரின் தென்மேற்குப் பகுதியில் இருந்தது. ஆகாசு, மனாசே ஆகிய இஸ்ரயேல் மன்னர்கள் இப்பள்ளத்தாக்கில் மோலெக்கு என்னும் பிற தெய்வத்திற்குத் தங்கள் பிள்ளைகளைப் பலியாகத் தீயில் சுட்டெரித்தனர் என்னும் செய்தி விவிலியத்தில் உள்ளது (காண்க: 2 குறி 28:3; 33:5; எரே 32:35). மன்னன் யோசேயா இக்கொடிய பழக்கத்தை ஒழித்தார் (காண்க: 2 அர 23:10). பின்னர் குப்பைக் கூழங்களைக் கொட்டுகின்ற இடமாக அப்பள்ளத்தாக்கு மாறியது. அவற்றைச் சுட்டெரிக்கும்படி மூட்டப்பட்ட தீ எப்போதும் எரிந்து புகைந்துகொண்டே இருக்கும். எரிந்து சாம்பலாகாமல் போன குப்பைக் கூழங்கள் நடுவே புழுக்கள் நௌpவதும் உண்டு. அந்த இடத்தையே இயேசு ''அணையாத நெருப்புள்ள நரகம்'' என விவரித்தார். கைகால் இழந்த நிலையில் நிலைவாழ்வில் புகுவது அந்த எரி குண்டமாகிய நரகத்தில் இரு கையுடையவராய் தள்ளப்பட்டு, துன்புற்று, எரிந்து சாம்பலாவதைவிட மேலானது என்றார் இயேசு. பாவம் செய்தால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் என்னும் கருத்து விவிலியத்தில் உள்ளது. ஆனால் கடவுள் நம்மை அன்புசெய்கிறார் என்பதால் நாம் அவரை அன்பு செய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளிடம் அன்பு காட்டுவோர் பிற மனிதரை அன்பு செய்யாமல் இருக்க இயலாது. ஏனென்றால் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்வது கடவுளின் பண்பு. அத்தகைய பண்பு நம்மில் துலங்கும் போது நாம் நரக தண்டனைக்குப் பயந்து பாவத்தை விலக்காமல், கடவுளின் அன்புக்கு எதிராகச் செயல்படலாகாது என்னும் உயரிய நோக்கத்தோடு வாழ்ந்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வில் பங்குபெற எங்களை அழைத்து, அன்போடு அரவணைக்கின்ற உம்மை நாங்கள் எப்போதும் அன்புசெய்திட அருள்தாரும்.