யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-02-17




முதல் வாசகம்

நாம் இறங்கிப்போய், அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 11: 1-9

அந்நாள்களில் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, ``வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்'' என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர். பின், அவர்கள் ``வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலைநாட்டுவோம்'' என்றனர். மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், ``இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் ஒரே மொழி பேசுகின்ற னர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித் தடுத்து நிறுத்த முடியாது. வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்'' என்றார். ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். ஆகவே அது ``பாபேல்'' என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 33: 10-11. 12-13. 14-15

வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார். 11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். பல்லவி

12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி

14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34 - 9: 1

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்'' என்றார். மேலும் அவர் அவர்களிடம், ``இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும்...செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்' என்றார்'' (மத்தேயு 23:2,3)

சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. சிலர் மிகுந்த பேச்சு வன்மையோடு உயரிய கருத்துக்களை எடுத்து விளக்குவதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூற எப்போதும் தயாராய் இருப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்வில் அந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய முரண்பாடும் இடைவெளியும்தான் இருக்கும். இத்தகைய போக்கினை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார். இயேசுவை எதிர்த்த பரிசேயர் யூத சமயத்தில் சீர்திருத்தம் கொணர விரும்பியவர்கள்தாம். சமய ஒழுங்குகளைப் பொறுத்தமட்டில் பொதுநிலையினருக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என அவர்கள் பாடுபட்டதுண்டு. எனவே, தூய்மைச் சடங்கு சார்ந்த சட்டங்கள் குருக்களுக்கு மட்டுமல்ல, பொதுநிலையினருக்கும் பொருந்தும் என அவர்கள் கற்பித்தனர். ஓய்வு நாளை எல்லாரும் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களது போதனை. எனவே, பரிசேயர் மக்கள்மீது பெரிய பளுவைச் சுமத்தினார்கள் என்பது உண்மையே. இயேசுவும் கூட மக்கள் நன்னடத்தை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என போதித்தார். ஆயினும் இயேசுவின் போதனை தாங்கமுடியாத ஒரு பளு அல்ல. ''என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 11:30).

மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் இயேசுவும் கருத்தாயிருந்தார். ஆனால், பரிசேயரைப் போல இயேசு சமயச் சடங்குகளுக்கு முதன்மையிடம் அளிக்கவில்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதிலும் இயேசு அக்கறை காட்டவில்லை. மாறாக, சமயச் சட்டங்களும் ஓய்வு நாள் பழங்கங்களும் மக்களுடைய நன்மையைக் கருத்தில் கொண்டே விளக்கப்பட வேண்டும் என்பதில் இயேசு உறுதியாயிருந்தார். சட்டத்தைக் கடைப்பிடிக்காத சாதாரண மக்களைப் பரிசேயர் ''பாவிகள்'' என்றழைத்து ஒதுக்கினார்கள். ஆனால் இயேசுவோ ''பாவிகளைத் தேடி வந்தார்'' (மத் 9:13). கடவுளின் அன்பை எல்லா மக்களோடும் பகிர்ந்திட விழைந்தார். அவர் அறிவித்த இறையாட்சியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் கிடையாது. கடவுள் ஒருவரே அனைவருக்கும் தந்தையாக இருப்பார். மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் முறையில் ஒருவர் ஒருவருக்குச் ''சகோதரர், சகோதரிகளாக'' இருப்பார்கள் (காண்க: மத் 23:8-9). இவ்வாறு சமத்துவம் நிலவுகின்ற சமுதாயத்தை உருவாக்க வந்த இயேசு பணிசெய்வதிலேயே முனைந்திருந்தார். அவருடைய பணி வாழ்வு நமக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக உள்ளது. ''உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்'' என்று அறிவித்த இயேசுவின் சொற்கள் நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 23:11).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சொல்லும் செயலும் முரண்பட்டிருக்காமல் இசைவுடன் அமைந்திட எங்களுக்கு அருள்தாரும்.