யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-02-07




முதல் வாசகம்

நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 20 - 2: 4

தொடக்கத்தில் கடவுள், ``திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!'' என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லா விதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்'' என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், ``கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக'' என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், ``மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்'' என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்'' என்றார். அப்பொழுது கடவுள், ``மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது!
திருப்பாடல் 8: 3-4. 5-6. 7-8

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ``உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ``வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், ``உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். `உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும் `தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, `நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது `கொர்பான்' ஆயிற்று; அதாவது `கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5)

இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் யூத சமயச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர். எழுத்துவடிவில் வந்த சட்டங்கள் தவிர மரபுவழி வந்த சட்டங்கள் வேறே இருந்தன (''மூதாதையர் மரபு''). அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பரிசேயர் கருத்து. இவ்வாறு ஒரு காலத்தில் கோவில் பலிமுறையோடு இணைந்திருந்த சட்டங்களை அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் வழக்கம் எழுந்தது. இதனால் சாதாரண மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாயினர். கைகளைக் கழுவி உணவு அருந்துவது சுகாதாரமான பழக்கம். ஆனால் பரிசேயர் முறைப்படி அது ஒரு சடங்கு. வறட்சி மிகுந்த பாலஸ்தீன நாட்டுப் பகுதிகளில் நீர் கிடைப்பதும் அரிது. ஆனால் எப்போதும் கைகளைக் கழுவ வேண்டும் என்பது மக்கள்மீது சுமத்தப்பட்ட ஒரு சட்டமாக மாறிவிட்டிருந்தது. இயேசு பரிசேயரின் வெளிவேடத்தைப் பார்க்கிறார். சட்டத்தின் உண்மையான பொருளை மறந்துவிட்டு, அல்லது அதை மறைத்துவிட்டு வெளிச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதரை இயேசு கண்டிக்கிறார்.

கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்வதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் எனச் சட்டம் கூறுவதை மறந்துவிட்டு, வெளிச்சடங்குகளைச் செய்துவிட்டால் தங்கள் கடமை தீர்ந்துவிட்டது என நினைப்போர் தவறு செய்கிறார்கள் என இயேசு உணர்த்துகிறார். முதிர்ந்த வயதில் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்னும் கடமையைத் தட்டிக்கழிப்பதற்காகத் தன் சொத்து கடவுளுக்குக் காணிக்கையாகிவிட்டது என்று கூறுவது வெளிவேடம் (மாற் 7:10-11). பரிசேயரின் நடத்தை இன்று நம் நடத்தையாக மாறிவிடுகின்ற ஆபத்து உள்ளது. வெள்ளிக் கிழமை உபவாசம் இருப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாயிருக்கிற ஒருவர் கடவுளையும் பிறரையும் அன்புசெய்யத் தவறினால் அதுவும் பரிசேய நடத்தைதானே. (காண்க: மாற் 7:6-7).

மன்றாட்டு:

இறைவா, மனமுவந்து உம்மை அன்புசெய்திட எங்களுக்கு அருள்தாரும்.